
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடிய அவர் 2011 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதனாலேயே அவரை வரலாற்றின் சிறந்த ஃபினிஷர் என்று நிறைய ரசிகர்கள் பாராட்டுவது வழக்கமாகும்.
ஆனால் அவருடைய கேரியர் முடிந்த விதம் மிகவும் வலி நிறைந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 240 ரன்களை துரத்தியது. அப்போது விராட் கோலி, ராகுல், ரோகித் சர்மா உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 92/6 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் போராடி இந்தியாவை 208/7 என்ற நிலைமைக்கு கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் அதிரடி காட்ட முயற்சித்த ஜடேஜா விக்கெட்டை இழந்தார். அவருக்குப் பின் தோனி அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கடைசி 5 ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பந்துகளை அடிக்காமல் விட்ட தோனி நங்கூரமாகவே பேட்டிங் செய்தார்.
கடைசியில் சிக்ஸர் அடித்த அவர் டபுள் எடுக்கும் முயற்சித்த போது ரன் அவுட்டானது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. ஏனெனில் அத்துடன் தோல்வியை சந்தித்த இந்தியாவுக்காக அதுவே தோனி விளையாடியது கடைசிப் போட்டியாக அமைந்தது. இந்நிலையில் அன்றைய நாளில் ஒரு கட்டத்துக்கு பின் அதிரடி காட்டத் தவறிய தோனி கடைசியில் தங்களுடைய சிக்ஸர் வலையில் விழுத் தயாரானதாக நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் இந்தியாவுக்கு எவ்வளவு ரன்கள் தேவை என்பது எனக்கு நினைவில்லை. ஆனால் வெற்றிக்கு அவர்கள் ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அப்போது தோனி அண்டர் கட் ஷாய் அடிக்கிறாரா என்பதைப் பார்ப்பதே எங்களுடைய திட்டமாக இருந்தது. ஆனால் தோனி அதை அடிக்காமல் விட்டார். அது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது”
இதையும் படிங்க: மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்பும் விஜய் சங்கர்.. தமிழ்நாடு டூ திரிபுரா – வெளியேறிய 3டி பிளேயர்
“ஏனெனில் நீங்கள் பவுலிங் செய்யும் போது இயற்கையாக எதிரணிக்கு ரன்கள் கொடுக்கக்கூடாது என்று விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிரணி பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் விடுவது எங்களுக்கு நல்லது. ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்தை நான் அதே போல வீசிய போது தோனி பவுண்டரிக்கு மேலே சிக்ஸர் அடித்தார். எனவே எங்களுடைய திட்டம் கிட்டத்தட்ட வேலை செய்தது. கடைசியில் அவரை போட்டியிலிருந்து வெளியேற்றி செமி ஃபைனலில் வென்றது எங்களுக்கு நன்றாக அமைந்தது” என்று கூறினார்.