விராட் கோலியை தான் அவங்க பாலோ பண்றாங்க, இந்தியா தப்பு பண்ணிட்டாங்க – முன்னாள் இங்கி வீரர் ஓபன்டாக்

Lloyd
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து முதல் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதியன்று தார் ரோடு போல இருந்த ராவல்பிண்டி பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 657 ரன்கள் குவித்து பின்னர் பந்து வீச்சிலும் அசத்தலாக செயல்பட்டு 579 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதை தொடர்ந்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சிலும் அதிரடி காட்டிய அந்த அணி 264/7 ரன்களில் தைரியமாக டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

James Anderson PAK vs ENG

- Advertisement -

அதை தொடர்ந்து 343 ரன்களை துரத்திய பாகிஸ்தான் ஒன்றரை நாட்கள் மீதமிருந்தும் வெற்றிக்காக விளையாடாமல் டிரா செய்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் விளையாடியதை பயன்படுத்தி இங்கிலாந்து கடைசி நாளில் அபாரமாக பந்து வீசி 268 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வென்றது. இப்போட்டியில் முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இங்கிலாந்து ட்ரா செய்யாமல் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற எண்ணத்துடன் 4வது நாளில் சரியான நேரத்தில் தைரியமாக டிக்ளேர் செய்து வெற்றி கண்டது அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

கோலியை பாலோ பண்றாங்க:
முன்னதாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் அணுகு முறையை பின்பற்றி நியூசிலாந்து மற்றும் இந்தியாவை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து தற்போது வெளிநாட்டு மண்ணிலும் சாதித்து காட்டியுள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று இதர அணிகளுக்கு இங்கிலாந்து கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக மைக்கேல் வாகன் போன்ற நிறைய முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய கேப்டனாக சாதனை படைத்தார். அந்த வகையில் விராட் கோலியின் ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான அணுகு முறையை தான் தற்போது இங்கிலாந்து பின்பற்றுவதாக இந்திய ரசிகர்கள் கூறுவது சரி தான் என்று முன்னாள் வீரர் டேவிட் லாயிட் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் வரலாற்றில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளும் ஏற்கனவே அதிரடி அணுகு முறையில் விளையாடியதாக தெரிவிக்கும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதர இந்திய கேப்டன்களை விட விராட் கோலியால் மட்டுமே இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்த முடியும் என்றும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த அணுகு முறை புதிது கிடையாது. 90களில் ஆஸ்திரேலியா ஏற்கனவே நேர்மறை அணுகு முறையுடன் விளையாடியது. அந்த காலத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் சில அதிரடி வீரர்களால் உலகை மிரட்டியது”

Steve Smith Virat Kohli IND vs AUS

“ஆனால் நீண்ட நாட்கள் கழித்து தற்போது அந்த அணுகு முறை மற்றும் ஸ்டைல் இந்திய அணியில் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் கேப்டன்கள் புள்ளி விவரங்களால் இயக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் விராட் கோலியால் மட்டுமே அதை வெற்றிகரமாக ஓட்ட முடியும்” என்று கூறினார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியான அணுகு முறையில் இந்தியா விளையாடியதற்கு விராட் கோலி தான் காரணம் என்று தெரிவிக்கும் அவர் இதர இந்திய வீரர்கள் மற்றும் கேப்டன்கள் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பழைய அணுகு முறையில் விளையாடுவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இப்படி ஒரு தங்கமான கேப்டன் யாருக்கும் கிடைக்கவே மாட்டாரு – ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி யுவ்ராஜ் சிங் கூறியது என்ன?

எனவே விராட் கோலியால் மட்டுமே இந்திய அணியில் இயற்கையாகவே இருக்கும் அதிரடியான அணுகு முறையை வெளிக்கொண்டு வந்து வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் உலகக்கோப்பை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்ததால் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement