அனுபமில்லாத கேப்டனாக முதல் சீசன், அழுத்தமான பைனல் ! ஆனாலும் அசத்திய பாண்டியா, படைத்த மொத்த சாதனைகளின் பட்டியல்

- Advertisement -

ரசிகர்களை 2 மாதங்களாக மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதி இரவு 8 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத்தின் தரமான பந்துவீச்சில் வெறும் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 22 (16) கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) தேவ்தூத் படிக்கல் 2 (10) சிம்ரோன் ஹெட்மயர் 11 (12) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக இந்த வருடம் முழுவதும் ரன் மழை பொழிந்து வந்த ஜோஸ் பட்லர் 5 பவுண்டரியுடன் 39 (35) ரன்கள் எடுத்தார்.

அந்த அளவுக்கு அட்டகாசமாக பந்துவீசிய குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 131 என்ற எளிய இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சாஹா 5 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேத்யூ வேட் 8 (10) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 23/2 என சரிந்த தனது அணியை அடுத்து களமிறங்கி தாங்கிப் பிடித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

குஜராத் சாம்பியன்:
3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து வெற்றி உறுதி செய்து அவர் ஆட்டமிழக்க அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34* (30) ரன்களும் மறுபுறம் நங்கூரமாக நின்ற சுப்மன் கில் 45* (43) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்தனர். அதனால் 18.1 ஓவரிலேயே 133/3 ரன்கள் எடுத்த குஜராத் சொந்த மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது. மறுபுறம் இந்த மாபெரும் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 2008க்குப் பின் 2-வது கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீப காலங்களில் காயத்தால் இந்திய அணியில் தனது இடத்தை இழந்து நின்றார். ஆனாலும் 5000+ கோடி செலவில் உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் 15 கோடிக்கு அவரை நம்பி வாங்கியதுடன் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அவர் தலைமையில் குஜராத் எங்கே வெற்றி பெறப் போகிறது என்று அனைவரும் ஆரம்பத்தில் குறைத்து எடை போட்டனர்.

- Advertisement -

பாண்டியா மாஸ்:
ஆனால் கேப்டன் பொறுப்பேற்றதும் இதற்கு முன் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் 3-வது இடத்தில் களமிறங்கி குஜராத் சரியும் போதெல்லாம் தாங்கிப்பிடித்து தேவையான அதிரடியான ரன்களை விளாசினார். அதேபோல் பந்துவீச்சிலும் தேவையான சமயங்களில் பந்து வீசிய அவர் எஞ்சிய வீரர்களையும் கேப்டனாக சிறந்த முறையில் வழிநடத்தினார். அதனால் லீக் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன்பின் குவாலிபயர் 1 போட்டியிலும் ராஜஸ்தானை தோற்கடித்து அந்த அணி நேற்றைய இறுதி போட்டியில் வென்று சரித்திரம் படைத்துள்ளது.

இந்த அனுபவமில்லாத கேப்டன் பதவியில் முதல் சீசனில் அழுத்தம் நிறைந்த மாபெரும் பைனலிலும் அசத்திய பாண்டியா 3 விக்கெட்டுகளையும் முக்கியமான 34 (30) ரன்களை எடுத்து ஆல்-ரவுண்டராக செயல்பட்டு தனது அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதன் வாயிலாக அவர் படைத்த மொத்த சாதனைகளின் பட்டியல் இதோ:

- Advertisement -

1. முதலில் கேப்டனாக களமிறங்கிய முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற 3-வது கேப்டன் என்ற பெருமையை ஷேன் வார்னே (2008) ரோகித் சர்மா (2013) ஆகியோருக்கு பின் ஹர்டிக் பாண்டியா பெற்றார்.

2. மேலும் மிக இளம் வயதில் கோப்பையை வென்ற 2-வது கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மாவுக்கு (2013, மும்பைக்காக) பின் பெற்றார்.

- Advertisement -

3. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற 2-வது கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மாவுக்கு பின் பெற்றார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 13 போட்டிகள்
2. ஹர்டிக் பாண்டியா/ஷேன் வார்னே : தலா 15* போட்டிகள்
3. ஆடம் கில்கிறிஸ்ட் : 24 போட்டிகள்

4. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற 3-வது கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. அனில் கும்ப்ளே : 2009
2. ரோஹித் சர்மா : 2015
3. ஹர்டிக் பாண்டியா : 2022*

5. ஐபிஎல் கோப்பையை எம்எஸ் தோனி, கௌதம் கம்பீர், ரோகித் சர்மாவும் ஆகியோர்களுக்கு பின் வென்ற 4-வது இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார்.

6. ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த 2-வது கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. அனில் கும்ப்ளே : 4/16 (2009)
2. ஹர்டிக் பாண்டியா : 3/17 (2022)*

7. ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் குறைந்த ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பவுலர் என்ற பெருமை பெற்றார். அந்தப் பட்டியல் இதோ:
1. அனில் கும்ப்ளே : 16 ரன்கள் (2009)
2. ரவிச்சந்திரன் அஷ்வின் : 16 ரன்கள் (2011)
3. ஹர்டிக் பாண்டியா : 17 ரன்கள் (2022)*

8. ஐபிஎல் இறுதிப் போட்டியில் 30+ ரன்கள் 3 விக்கெட்டுகள் எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. யூசுப் பதான் : 2008
2. ஹர்டிக் பாண்டியா : 2022*

Advertisement