IND vs ENG : ஆதங்கத்தில் ரசிகர்கள், இந்தியாவுக்காக தனி ஒருவனாக போராடிய சூர்யா – படைத்த 6 சாதனைகள் இதோ

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற 3-வது டி20 போட்டி ஜூலை 10-ஆம் தேதியான நேற்று நாட்டிங்காமில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் 18 (9) ரன்களிலும் ஜேசன் ராய் 27 (26) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அடுத்ததாக களமிறங்கிய பிலிப் சால்ட் 8 (6) ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் – லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிரடியாக 4-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுத்தனர்.

அதில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (39) ரன்களை பறக்கவிட்ட டேவிட் மாலன் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த மொய்ன் அலி டக் அவுட்டானாலும் ஹரி ப்ரூக் 19 (9) கிறிஸ் ஜோர்டான் 11 (3) என அதிரடியான ரன்களை எடுத்தனர். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன் 42* (29) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். சுமாராக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

போராடிய ஸ்கை:
அதை தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர் ரிஷப் பண்ட் 1 (5), விராட் கோலி 11 (6) ரோகித் சர்மாவும் 11 (12) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 31/3 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் அரைசதம் கடந்து இந்தியாவை தூக்கி நிறுத்த போராடினார்.

5-வது ஓவரில் சேர்ந்து 15-வது ஓவர் வரை 4-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 28 (23) ரன்களில் அவுட்டானார். அந்த சமயத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 7 (4) ரவீந்திர ஜடேஜா 7 (4) என பினிஷர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இந்தியாவை கைவிட்டனர். ஆனால் மறுபுறம் சிங்கத்தைப் போல இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சாய் போராடிய சூர்யகுமார் யாதவ் 14 பவுண்டரி 6 சிக்சர்களுடன் சதமடித்து 117 (55) ரன்கள் குவித்து 19-வது ஓவரில் அவுட்டானார்.

- Advertisement -

போராட்டம் வீண்:
அடுத்ததாக பேட்ஸ்மேன்களும் இல்லாததால் 20 ஓவர்களில் 198/9 ரன்களை எடுத்த இந்தியா போராடி 17 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்த ரீஸ் டாஃப்ளி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த பெரிய வெற்றிகளைப் பதிவு செய்திருந்த இந்தியா 2 – 1* (3) என்ற கணக்கில் தொடரை வென்று சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து பழிதீர்த்துக் கொண்டது.

இப்போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய டாப் ஆர்டர் மற்றும் தினேஷ் கார்த்திக் ரவீந்திர ஜடேஜா ஆகிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் கணிசமான 20 – 30 ரன்களை அடித்திருந்தால் கூட உயிரைக்கொடுத்து சதமடித்து வெற்றிக்காக போராடிய சூர்யகுமார் யாதவ் போராட்டம் வீணாகியிருக்காது என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

- Advertisement -

சாதனைகளின் பட்டியல்:
1. இப்போட்டியில் 117 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மன் என்ற புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் : 117, இங்கிலாந்துக்கு எதிராக, நாட்டிங்கம், 2022*
2. தீபக் ஹூடா : 104, அயர்லாந்துக்கு எதிராக, டப்ளின், 2022

2. மேலும் ரோகித் சர்மாவுக்கு பின் (118 ரன்கள்) அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டியில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் மற்றும் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சூர்யகுமார் யாதவ் : 117, 2022*
2. ஷிகர் தவான் : 90, இலங்கைக்கு எதிராக, 2018

- Advertisement -

3. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4-வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2016இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 110* ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.

4. அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த இந்திய பேட்ஸ்மேன் (31 வருடம் 299 நாட்கள்) என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

5. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேறு எந்த இந்திய வீரரும் 30 ரன்கள் கூட எடுக்காத நிலைமையில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

6. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4-வது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யருடன் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. சூரியகுமார் யாதவ் – ஸ்ரேயாஸ் அய்யர் : 119, இங்கிலாந்துக்கு எதிராக
2. கேஎல் ராகுல் – எம்எஸ் டோனி : 107, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக

Advertisement