IND vs SA : தோனிக்கு பின் சாதனையுடன் போராடிய சாம்சன், ஜாம்பவான்கள் பாராட்டு – இனியாவது தொடர் வாய்ப்பு கிடைக்குமா?

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 6ஆம் தேதியன்று துவங்கியது. முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ரோகித் சர்மா தலைமையில் உலக கோப்பையில் பங்கேற்க முதன்மை அணி ஆஸ்திரேலியா பயணத்துள்ள நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. லக்னோவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் போராடி 249/4 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ஜானெமன் மாலன் 22 (42) ரன்கள் குயின்டன் டி காக் 48 (54) ரன்கள் எடுத்த போதிலும் அடுத்து வந்த கேப்டன் பவுமா 8, மார்க்ரம் 0 என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 110/4 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹென்றிச் க்ளாசீன் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74* (65) ரன்களும் டேவிட் மில்லர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 75* (65) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

போராடிய சாம்சன்:
அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கில் 3 (7), கேப்டன் தவான் 4 (16) என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் 19 (42) இஷான் கிசான் 20 (37) என முக்கிய வீரர்களும் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 51/4 என்ற படுமோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி சஞ்சு சாம்சனுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 50 (37) ரன்களில் போராடி அவுட்டானார்.

அந்த சமயத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூருடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 6வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடினார். அதில் தாகூர் 33 (31) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியை அதிகப்படுத்திய சஞ்சு சாம்சன் முடிந்தளவுக்கு போராடி 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்கள் எடுத்தார். ஆனாலும் 40 ஓவர்களில் 240/8 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

தென்ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் டி20 தொடரின் தோல்விக்கு பதிலடியாக இப்போட்டியில் சிறப்பான வெற்றி பெற்ற அந்த அணி 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பந்து வீச்சில் கடைசி நேரத்தில் ரன்களை வழங்கிய இந்தியா பேட்டிங்கில் 51/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்றதால் கடைசியில் ஷ்ரேயஸ், சாம்சன், தாகூர் ஆகியோர் போராடியும் மீள முடியவில்லை.

ஜாம்பவான்கள் பாராட்டு:
அதிலும் குறிப்பாக 51/4 என்ற நிலைமையில் களமிறங்கி 22 ஓவர்கள் நங்கூரமாக நின்று முன்னாள் கேப்டன் தோனியை போல் கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்ற சஞ்சு சாம்சன் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடியது அனைவரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒருவேளை டாப் ஆர்டர் இன்னும் 10 ரன்களை அதிகமாக எடுத்துக் கொடுத்திருந்தால் கூட நிச்சயம் அவரது போராட்டம் வீணாகியிருக்காது.

அப்படி அற்புதமாக விளையாடிய சஞ்சு சாம்சனை முன்னாள் இந்திய வீரர்கள் மதன் லால், அமித் மிஸ்ரா, வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர், இர்பான் பதான், முகமது கைஃப், ஹர்பஜன் சிங் ஆகியோரும் ரசிகர்களும் மனதாரப் பாராட்டினார்கள். மேலும் 2015இல் அறிமுகமாகி இதுவரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று வரும் அவர் ஆரம்பகாலங்களில் தடுமாறினாலும் இந்த வருடம் கிடைக்கும் வாய்ப்புகளில் இது போல அசத்தி வருகிறார். அதனால் இனியாவது அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இப்போட்டியில் தன்னுடைய அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை பதிவு செய்த அவர் 86* ரன்கள் குவித்த ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த 2வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார். அந்தப் பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 92*
2. சஞ்சு சாம்சன் : 86*
3. ரிஷப் பண்ட் : 85

Advertisement