இதெல்லாம் தோனியிடம் கத்துக்கிட்டேன்.. 2023இல் இருந்து ஜடேஜாவும் நானும் அவுட்டாகல.. துபே பேட்டி

Shivam Dube
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரை நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூருவை தோற்கடித்து வெற்றியுடன் துவக்கியுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 174 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த சென்னைக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, சிவம் துபே 34*, ஜடேஜா 25* ரன்கள் அடித்து 18.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி கண்ட சென்னை 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

- Advertisement -

தோனியிடம் கற்றது:
முன்னதாக இந்தப் போட்டியில் 110/4 என சென்னை தடுமாறிய போது 13வது ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். குறிப்பாக தரமான பந்துகளுக்கு மதிப்பு கொடுத்த இந்த ஜோடி சுமாரான பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டு கடைசி வரை அவுட்டாகாமல் சென்னையை வெற்றி பெற வைத்தது.

இந்நிலையில் இது போன்ற அழுத்தமான நேரங்களில் பதறாமல் இருந்து போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யும் யுக்தியை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக சிவம் துபே கூறியுள்ளார். மேலும் 2023 ஐபிஎல் ஃபைனலில் ஃபினிஷிங் கொடுத்து 5வது கோப்பையை வெல்ல உதவிய ஜடேஜாவும் தாமும் இன்னும் அவுட்டாகாமல் களத்திலேயே இருப்பதாகவும் துபே கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆச்சரியமாக இருந்தது. நானும் ஜடேஜாவும் 2023 ஃபைனல் முதல் இன்னும் அவுட்டாகவில்லை. சென்னை அணிக்காக போட்டியை ஃபினிஷிங் செய்வது எப்போதும் எனக்கு வேறு விஷயம். அதைத் தான் மஹி பாயிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். அதைத் தான் ஒவ்வொரு ஆட்டத்திலும் செய்ய முயற்சிக்கிறேன். போட்டியை குறிப்பாக ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தையே வெற்றிகரமாக முடிக்கும் போது அது நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க: இளம் சிஎஸ்கே வீரரிடம் ஜாம்பவானான நீங்க இப்படியா பண்ணுவீங்க.. விராட் கோலி மீது ரசிகர்கள் கோபம்

“அதே சமயம் அவுட்டாகாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். ஏனெனில் அதை செய்தாலே என்னால் கடைசி வரை போட்டியில் இருக்க முடியும் என்பது தெரியும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து சென்னை தங்களுடைய அடுத்த போட்டியில் மார்ச் 26ஆம் தேதி குஜராத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement