- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடந்த முறை தோற்றபோது விராட் கோலி மீது பழிப்போட்டவர்கள் எங்கே – முன்னாள் வீரர் சுளீர் கேள்வி

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. இத்தனைக்கும் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மாவுக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இதுவரை பங்கேற்று வந்த அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் முன்னேறியது.

அந்த வகையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர பணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இப்படி பைனலுக்கு கூட செல்லாமல் வெளியேறியது தான் ரசிகர்களுக்கு வேதனையை கொடுக்கிறது. இந்த தோல்விக்கு விராட் கோலியை தவிர்த்து பேட்டிங்கில் பெரும்பாலான வீரர்கள் சுமாராக செயல்பட்டது, தவறான அணி தேர்வு, தேர்வு செய்த வீரர்களையும் சரியாக பயன்படுத்தாதது, ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப் என நிறைய அம்சங்கள் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கைப்போடு போட்டு இது போன்ற பெரிய தொடர்களில் முக்கிய நேரங்களில் சொதப்பி வெளியேறும் நிலைமையிலும் கொஞ்சமும் மாற்றம் ஏற்படவில்லை.

ரோஹித் என்னாச்சு:
இதனால் ஆசிய கோப்பையையே வெல்ல முடியவில்லை இதில் இவர்கள் எங்கே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற கவலையும் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தலைமையில் இதே போல சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்டாலும் உலகக்கோப்பையை வெல்லாத காரணத்தால் விராட் கோலி இருக்கும் வரை இந்தியா உலக கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் வெளிப்படையாக வந்தன.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அவர் ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்பதே அதற்கு காரணமாக பார்க்கப்பட்டது. மறுபுறம் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று விட்டார் என்பதற்காக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிப்பதற்கு அனைவரும் துடித்தனர். அதனாலேயே தாமாக முன்வந்து 2021 டி20 உலகக் கோப்பையுடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த விராட் கோலி தலைமையில் கடந்த வருடம் இதே துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது. அதை காரணமாக வைத்து அவருடைய ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

அதனால் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக இருந்தபோதிலும் மனமுடைந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது வேறு கதை. மேலும் விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகிய கூட்டணியால் தான் கடந்த வருடம் நடந்த டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்று நிறைய விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது ரோகித் சர்மா – டிராவிட் தலைமையில் மினி உலகக் கோப்பையை போல் கருதப்படும் ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியடைந்துள்ளதை சுட்டிக்காட்டும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கடந்த முறை விராட் கோலியை கூறிய கூறியவர்கள் இப்போது எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படியானால் பிரச்சனை கேப்டனிடமில்லை தவறான அணியை தேர்வு செய்யும் தேர்வு குழுவிடம் தான் உள்ளது எனக்கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் நாம் துபாயில் தோற்ற போது நிறைய பேர் விராட் கோலி தான் அதற்கு காரணம் என்றும் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் தற்போது ரோகித் சர்மாவாலும் இங்கே வெல்ல முடியவில்லை. இது கேப்டனிடம் பிரச்சனை இல்லை அணி தேர்வில் தான் பிரச்சனை உள்ளது என்பதை காட்டுகிறது”

“கடந்த முறை சஹால் போன்ற முக்கிய வீரர்களை கழற்றிவிட்டு திடீரென சில அனுபவமில்லாத வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்கினார். இப்போதும் அதே கதை தான் தொடர்கிறது. ஏனெனில் இப்போதும் இஷான் கிசான், சூரியகுமார், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்கினர். அதேப்போல் திடீரென்று தினேஷ் கார்த்திக்கை வெறுக்கும் நீங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்கிறீர்கள்” என்று நியாயமாக பேசினார்.

- Advertisement -
Published by