திறமை இருந்தும் பணம் தரும் டி20க்காக நீங்க டெஸ்ட் கிரிக்கெட்டை விட்ருக்க கூடாது – இந்திய வீரர் மீது லன்ஸ் க்ளூஸ்னர் ஏமாற்றம்

Lance Klusener
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் நேரத்தில் நடைபெறுகிறது. பொதுவாக இங்கிலாந்து மண்ணில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதே வெற்றிக்கான முதல் படியாகும். அதிலும் குறிப்பாக 4வது பவுலராக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருந்தால் எதிரணியை தெறிக்க விட்டு வெற்றிக்கு போராடலாம். அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் 4வது பவுலராக வேறு வழியின்றி ஷார்துல் தாக்கூரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

அவர் தகுதியான வீரர் என்றாலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்குவார் என்பது கவலையளிக்கக்கூடிய அம்சமாகும். அப்படிப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் விளையாடினால் இந்தியாவின் துருப்புச் சீட்டாக செயல்பட்டு கோப்பையை வெல்ல உதவுவார் என்று முன்னாள் ஜாம்பவான் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் நடக்காத ஒன்றை சுட்டிக்காட்டி பேட்டி கொடுத்திருந்தார். ஆம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் நீண்ட கால தேடலான தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என இந்திய ரசிகர்கள் மகிழும் அளவுக்கு அசத்தினார்.

- Advertisement -

க்ளூஸ்னர் ஆதங்கம்:
குறிப்பாக இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2018 சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரால் சாதிக்க முடியாது என்று சொன்ன ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் விமர்சனத்தை பொய்யாக்கினார். இருப்பினும் 2018 ஆசிய கோப்பையில் சந்தித்த காயத்தால் 2019 உலகக்கோப்பைக்கு பின் சுமாராக செயல்பட்டு கழற்றி விடப்பட்ட அவர் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

ஆனால் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் டி20 தொடரிலும் இந்தியாவுக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் விளையாடினால் போதும் என்று முடிவெடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதற்கான எந்த முயற்சிகளையும் எடுப்பதாக தெரியவில்லை. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு 10% கூட தயாராக இல்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்த பாண்டியா மீண்டும் அதில் விளையாட விரும்பினால் கடினமாக உழைத்து தமக்கான இடத்தை பெறுவேன் என்று ஓப்பனாக சொல்லி விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் ஹர்டிக் பாண்டியா போன்ற 135+ கி.மீ வேகத்தில் வீசும் ஆல் ரவுண்டர் டெஸ்ட் கிரிக்கெட்டை எளிதாக விட்டிருக்கக் கூடாது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் வீரர் லன்ஸ் க்ளூஸ்னர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் திரிபுரா மாநில அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பாண்டியா சிறப்பான வீரர். அவர் ஃபிட்டாக இருந்தால் தொடர்ந்து 135+ கி.மீ வேகத்தில் வீசலாம். அவர் எப்போதுமே உலக அளவில் மிகச்சிறந்த ஒரு ஆல் ரவுண்டராக சவாலை கொடுப்பவராக இருந்து வருகிறார்”

“இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் எளிதில் விட்டு விட்டார். ஒரு வீரராக உங்களது இடத்தையும் திறமையையும் உங்களை நீங்களே சோதித்துக் கொள்வதற்கும் டெஸ்ட் கிரிக்கெட் தான் உச்சமாக உதவும்” என்று கூறினார். மேலும் அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா விளையாடுவதற்கு அதன் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் காரணம் என்று பாராட்டும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

 இதையும் படிங்க:WTC Final : இளம் வீரர்கள் வந்தும் இந்தியாவால் அவரை கழற்றி விட முடியல, அதான் அவரோட தரம் – சீனியரை பாராட்டிய மஞ்ரேக்கர்

“சமீபத்திய வருடங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களை நிறைய முன்னேற்றியுள்ளார்கள். அது தான் அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் அவர்கள் விளையாடுவதற்கான காரணமாகும். அதனாலேயே அவர்கள் உலகின் சிறந்த அணியாகவும் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக வெளிநாட்டு அணிகள் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச்சை உருவாக்கினால் வெற்றி காணலாம் என்று நினைத்தனர். ஆனால் தற்போது அந்த சூழ்நிலைகளில் போட்டி போடும் அளவுக்கு இந்திய அணியினர் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement