
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 750-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார். அதோடு ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக இருந்த கிரிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்து இருந்தார்.
சர்வதேச பவுலர்களுக்கு எதிராக இவரது அசாத்தியமான அதிரடி ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது. அதோடு விரைவில் அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. அந்த வகையில் ஐ.பி.எல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேவேளையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகளில் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் இரண்டாவது போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறிய வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இந்த முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவரை தொடர்ந்து இந்திய அணியில் பயன்படுத்த வேண்டும் என்றும் அடுத்த ஒரு ஆண்டுக்கு அவரை ஓய்வில்லாமல் விளையாட வைக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சிவராமகிருஷ்ணன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
வெள்ளை பந்து போட்டிகளில் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக அவர் விளையாடினால் தான் தனது ஆட்டத்தில் இருக்கும் குறைகளை புரிந்து கொண்டு அதிலிருந்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதேபோன்று அடுத்த ஒரு ஆண்டு அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடினால் மனரீதியாகவும் அவர் இன்னும் முன்னேற்றத்தை காண்பார்.
இதையும் படிங்க : இரண்டாவது டி20 போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட பிறகு கம்பீர் செய்த செயல் – விவரம் இதோ
பவுலர்களை விட பேட்ஸ்மன்களுக்கு பெரியளவில் உடற்தகுதி தேவையில்லை எனவே ஒரு ஆண்டு அவருக்கு தொடர் வாய்ப்புகளை கொடுத்து அவரை தயார்படுத்தினால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய முதலீடாக இருப்பார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் என்றும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து சிவராமகிருஷ்ணன் பேசியது குறிப்பிடத்தக்கது.