2023 உ.கோ’யை இந்தியா பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளால் ஜெயிக்க முடியாது – நிதர்சனத்தை விளக்கும் சங்ககாரா

kumar Sangakkara IND vs PAK rohit sharma babar azam
- Advertisement -

2023 புத்தாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் லட்சியத்தை முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏனெனில் என்னதான் டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற ஐசிசி தொடர்கள் நடைபெற்றாலும் சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியன் 50 ஓவர் உலக கோப்பையிலிருந்து தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

worldcup

ஏனெனில் கடந்த 2013க்குப்பின் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் திண்டாடி வரும் இந்தியா கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் எம்எஸ் தோனி தலைமையில் கோப்பையை வென்று 28 வருட உலகக்கோப்பை தாகத்தை தணித்து கொண்டது. அந்த வரிசையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் எப்போதுமே சொந்த மண்ணில் எதிரணிகளை தெறிக்க விடும் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ராஜாங்கம் நடத்தி வருகிறது.

- Advertisement -

வாய்ப்பில்ல ராஜா:
அத்துடன் 2011இல் முதல் முறையாக சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வென்ற பின் 2015இல் ஆஸ்திரேலியா, 2019இல் இங்கிலாந்து ஆகிய அடுத்த 2 உலகக் கோப்பைகளையும் அந்தந்த அணிகள் சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தன. அந்த வகையில் நிச்சயமாக இம்முறை இந்தியாவும் கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் 2011க்குப்பின் காலம் மாறிவிட்டதாகத் தெரிவிக்கும் முன்னாள் இலங்கை ஜாம்பவான் கேப்டன் குமார் சங்ககாரா இப்போதெல்லாம் ஆசிய நாடுகளை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகள் இங்குள்ள சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் அசத்துவதற்கு கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.

INDvsPAK

போதாக்குறைக்கு ஐபிஎல் தொடரால் வெளிநாட்டவர்கள் இந்திய கால சூழ்நிலையை புரிந்து கொண்டுள்ளதால் இம்முறை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகள் 2023 உலக கோப்பை வெல்வதற்கு வாய்ப்பில்லை என்றும் சங்ககாரா கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “2011க்குப்பின் நிறைய அம்சங்கள் மாறிவிட்டன என்று நினைக்கிறேன். குறிப்பாக அந்த காலங்களில் ஆசிய கண்டத்தில் இருக்கும் கால சூழ்நிலைகள் ஆசிய கண்டத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு சாதகமாக இருந்தன”

- Advertisement -

“ஆனால் சமீபத்திய வருடங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற வெளிநாட்டவர்கள் ஆசிய கண்டத்தின் நாடுகளைச் சேர்ந்த வீரர்களை விட இங்குள்ள கால சூழ்நிலைகளில் சுழல் பந்து வீச்சை எப்படி சிறப்பாக விளையாட வேண்டுமென கற்றுக் கொண்டுள்ளனர். அதற்கு சான்றாக ரிவர்ஸ் ஸ்வீப், பேடல் ஷாட், ஸ்வீப் போன்ற காலை பயன்படுத்தி அடிக்கும் புதிய ஷாட்டுகளை அவர்கள் முன்பை விட அதிகமாக அடிப்பதை பார்க்க முடிகிறது. அது அவர்களிடம் இந்திய துணை கண்டத்தில் நாம் பார்க்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது”

Sanga

“அத்துடன் ஐபிஎல் தொடர் வெளிநாட்டவர்களுக்கு இங்குள்ள நிறைய ரகசியங்களை வெளிக்காட்டியுள்ளது. எனவே இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகள் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். மேலும் உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இதர இளம் வீரர்கள் அவர்களை சுற்றி பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்கIND vs SL : இன்றைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

அவர் கூறுவது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நிதர்சனமாகும். ஏனெனில் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரால் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இந்திய கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டு இந்திய வீரர்களுடன் விளையாடி அவர்களது பலவீனத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். அதனால் உலகக் கோப்பை தொடரில் தங்களது நாட்டுக்காக விளையாடும் போது கற்ற வித்தைகளை பயன்படுத்தி இந்தியாவை வெளிநாட்டு வீரர்கள் அடித்து நொறுக்குகிறார்கள். எனவே 2023 உலகக் கோப்பையை இம்முறை இந்தியா போன்ற ஆசிய நாடுகள் வெல்லும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

Advertisement