தகுதியானவர்ன்னு பந்தை கொடுத்தேன்.. ஆனா அஸ்வின் அப்படி சொன்னதால் மறுக்க முடியல.. பின்னணியை பகிர்ந்த குல்தீப்

Kuldeep Yadav 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி துவங்கியது. தரம்சாலாவில் நடைபெறும் அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சுமாராக விளையாடி 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் அடித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா தனது பங்கிற்கு 52* ரன்களும் அடுத்ததாக வந்த சுப்மன் கில் 26* ரன்களும் எடுத்தனர். அதனால் முதல் நாள் முடிவில் 135/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இந்த போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

35 முறை 5 விக்கெட்:
முன்னதாக இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் வழக்கம் போல இன்னிங்ஸ் முடிந்ததும் பந்தை எடுத்துக்கொண்டு இந்திய அணியை பெவிலியனுக்கு முன்னோக்கி அழைத்து செல்வார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாத அவர் 100வது போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினிடம் பந்தை கொடுத்தார். இருப்பினும் அதை ஏற்காத அஸ்வின் நீங்கள் தான் இதற்கு தகுதியானவர் என்று மீண்டும் அவரிடமே பந்தை கொடுத்தார்.

அப்போது மீண்டும் மரியாதை காட்டிய குல்தீப் பந்தை அஸ்வினிடம் கொடுத்தார். இருப்பினும் விடாப்படியாக நின்ற அஸ்வின் கடைசி வரை பந்தை குல்தீப் கையில் கொடுத்து இந்திய அணியை முன்னோக்கி நடக்க வைத்து பின்னே நின்று பாராட்டிய நிகழ்வு ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த தருணத்தில் எதனால் அஸ்வின் பந்தை வாங்க மறுத்தார் என்பதை பற்றி குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இது பற்றி முதல் நாள் போட்டியில் முடிவில் குல்தீப் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் மிகவும் கனிவான அடக்கமானவர். அவரைப் போல் இந்தியாவுக்காக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது நம்ப முடியாதது. நானும் அவருடன் கடந்த 7 வருடங்களாக அணியிலிருந்து வருகிறேன். அவருடைய ஏற்றத்தாழ்வுகளை நானும் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்து அவரிடம் இருந்து கற்றுக்கொள்வது அருமையாக இருக்கிறது. அவர் தன்னுடைய 100வது போட்டியில் விளையாடுகிறார் என்பதால் அணியை முன்னோக்கி வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்று நினைத்தேன”

இதையும் படிங்க: 80, 209, 214, 73, 57.. இங்கிலாந்தை சொல்லி அடித்த ஜெய்ஸ்வால்.. 75 வருடத்துக்கு பின் வேற லெவல் தனித்துவ சாதனை

“அவர் மிகவும் ஸ்பெஷலான வீரர். இருப்பினும் அந்த நேரத்தில் “நான் 35 எடுத்து விட்டேன். எனவே நீங்கள் முன்னோக்கிப் பந்தை எடுத்துச் செல்லுங்கள்” என்று அஸ்வின் என்னிடம் சொன்னார்” எனக் கூறினார். அதாவது அஸ்வின் ஏற்கனவே 35 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே வளர்ந்து வரும் வீரரான நீங்கள் தான் அணியை முன்னோக்கி நடத்துவதற்கு தகுதியானவர் என்று சொல்லி மீண்டும் பந்தை தன்னிடமே கொடுத்து விட்டதாக குல்தீப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement