பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயதாகும் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி அனைவரையும் ஈர்த்து வருகிறார். கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இந்திய அண்டர்-19 அணிக்காக அதிரடியான சதமடித்தார். அதைப் பார்த்த ராஜஸ்தான் அணி அவரை ஐபிஎல் தொடரில் வாங்கி விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது.
அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சூரியவன்சி குஜராத்துக்கு எதிராக 35 பந்தில் சதமடித்து சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து இந்தியா ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் அவர் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். 2025 அண்டர்-19 ஆசியக் கோப்பையில் அமீரகத்துக்கு எதிராக அவர் 171 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.
சச்சின் போல சூர்யவன்சி:
அதே வேகத்தில் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக 190 ரன்களை குவித்த சூர்யவன்சி பீகார் அணி 574 ரன்கள் குவித்து உலக சாதனை படைக்க உதவினர். அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150+ ரன்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார். இருப்பினும் அருணாச்சலப்பிரதேசம் போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டுமே அவர் அடிப்பதாக ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் 14 வயதிலேயே சூரியவன்சி வெளிப்படுத்தும் ஆட்டத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எனவே 16 வயதில் அறிமுகமான சச்சின் போல இந்தியாவுக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் ஸ்ரீகாந்த் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல், அண்டர்-19 உட்பட விளையாடும் அனைத்து இடங்களிலும் வைபவ் சதங்களை அடிக்கிறார்”
ஸ்ரீகாந்த் கோரிக்கை:
“அருணாச்சலப்பிரதேசத்துக்கு எதிராக அவர் அடித்தார் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அது வேறு கதை. இந்தப் பையன் அனைத்து விதமான போட்டிகளிலும் அடித்து நொறுக்குகிறார். அதனால் அவரை 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்க வேண்டும் என்று நான் கடந்த வருடமே கூறியிருந்தேன். இனிமேல் அதை செய்வது தாமதமானது. ஆனால் இப்போதும் அவரை நீங்கள் வேகமாக இந்திய அணிக்குள் கொண்டு வரலாம்”
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் சாதனை நிகழ்த்திய ஜோஷ் டங் – விவரம் இதோ
“அற்புதமான திறமைக் கொண்ட இந்தப் பையன் இந்திய அணிக்குள் விரைவில் சேர்க்கப்பட வேண்டும். இந்தப் பையனுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், இன்னும் உள்ளூரில் அசத்த வேண்டும் என்று சிலர் சொல்லலாம். சச்சின் டெண்டுல்கரும் இளம் வயதிலேயே விளையாடினார். நிச்சயமாக அவர் அனைத்து அளவிலும் சதமடித்த பின்பே இந்தியாவுக்காக விளையாடினார். அதை இந்தப் பையனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் செய்ய முடியும்” என்று கூறினார்.



