
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது முதல் போட்டியில் கிட்டத்தட்ட 350 ரன்கள் குவித்திருந்த வேளையில் வெறும் 17 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றியை பெற்றிருந்தது. அதற்கு அடுத்து நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 358 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இப்படி மிகப்பெரிய இலக்கை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அளித்திருந்தாலும் பந்துவீச்சின் போது மோசமாக செயல்பட்ட இந்திய அணி வெளிப்படுத்தியதாலே வெற்றியை அவர்களிடம் தாரை வார்த்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க முழு காரணமே பனிபொழிவின் போது பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டது தான் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் சரியான இடைவெளிகளில் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனதே சரிவுக்கு காரணமாக அமைந்தது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, சிராஜ் போன்ற நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடி வருவதாலும், சுழற்பந்து வீச்சாளர்களை பொறுத்த வரை விக்கெட் எடுக்கும் ஸ்பின்னர் இல்லை என்பதும் பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறுகையில் : இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி மேலும் 20 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று கேட்பதெல்லாம் பேராசை தான். ஒருவேளை அப்படி 20 ரன்கள் இந்தியா கூடுதலாக அடித்திருந்தால் கூட அது வீணாகி இருக்கும் என்று நான் கூறுவேன். ஏனெனில் இப்படி ஒரு பந்துவீச்சு யூனிட்டை வைத்துக்கொண்டு 500 ரன்கள் அடித்தால் கூட எதிரணி அதை சேசிங் செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
இந்திய அணியை பொறுத்தவரை தற்போதைக்கு ஒருநாள் அணிக்கு நல்ல சுழற்பந்து வீச்சாளர் தேவை என்று நினைக்கிறேன். அந்த வகையில் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தியை ஒருநாள் அணியிலும் விளையாட வைக்கலாம். ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த அவர் அந்த தொடரில் அற்புதமாக பந்துவீசினார். எனவே அவரை தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தி இருக்கலாம்.
இதையும் படிங்க : மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் ஹிட்மேன் ரோஹித் சர்மா – எந்த தொடரில் தெரியுமா?
ஆனால் ஏன் சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு அவரை வெளியேற்றினார்கள் என்ற எனக்கு தெரியவில்லை. எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினாலும் விக்கெட் எடுக்கக்கூடிய ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் வைத்திருப்பது முக்கியம். அந்த வகையில் வருண் சக்கரவர்த்தியை ஒருநாள் போட்டியில் விளையாட வைத்தால் தான் இந்திய அணியால் வெற்றிபெற முடியும் என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.