
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கையை சேர்ந்த மதிஷா பதிரனாவை சிஎஸ்கே அணி மீண்டும் வாங்கவில்லை. லசித் மலிங்கா போல ஸ்லிங்கா ஆக்சன் வைத்து பவுலிங் செய்த அவரைக் கண்டறிந்த சிஎஸ்கே நெட் பவுலராக வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் அசத்திய அவருக்கு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பையும் சிஎஸ்கே நிர்வாகம் கொடுத்தது.
அந்த வாய்ப்பில் தோனி தலைமையில் வளர்ந்த பதிரனா 2023 சீசனில் சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் சிஎஸ்கே அணி அவரை 13 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்தது. ஆனால் அப்போதிலிருந்து கடந்த 2 சீசன்களில் சுமாராக பந்து வீசிய அவர் அடிக்கடி காயமடைவதால் முழுமையாக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதில்லை.
அதனால் சிஎஸ்கே கழற்றி விட்ட அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. அதே போல 2024இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானையும் கொல்கத்தா அணி வாங்கியது. இந்நிலையில் 18 கோடிக்கு வாங்கும் அளவுக்கு பதிரனா தகுதியான பவுலர் இல்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ரஹ்மானை கொல்கத்தா வாங்கியது சிறந்த முடிவு என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “பதிரனா மிகப்பெரிய ரிஸ்க். அவர் வந்தால் மலை, இல்லையென்றால் தூசி போன்ற பவுலர். ஆனால் முஸ்தபிசுர் ரஹ்மானை வாங்கியது கொல்கத்தா எடுத்த சாதூர்யமான முடிவு. அவருடன் பதிரனாவை அவர்கள் பேக்அப் வீரராக பெற்றுள்ளார்கள்”
“இருப்பினும் அவருக்கு இத்தனை அணிகள் போட்டி போட்டதும், இவ்வளவு தொகைக்கு விலை போனதும் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. லக்னோ அவரை 18 கோடி வரை வாங்குவதற்கு சென்றது. உண்மையில் அவர் 18 கோடிக்கு தகுதியான பெரிய பவுலரா? கடந்த ஐபிஎல் தொடரில் அவருடைய ஆட்டம் சுமாராக இருந்தது. நிறைய வீரர்கள் ஒரு மோசமான சீசனுக்காக கழற்றி விட்டுள்ளார்கள்”
இதையும் படிங்க: தோனி பாய் தான் எங்க நட்பு உருவாக காரணம்.. இப்போவும் ரோஹித், கோலியால் சாதிக்க முடியும்.. தவான் பேட்டி
“ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் ஒரு வருடம் மோசமாக விளையாடியதால் தற்போது காட்சியிலேயே இல்லை. அது டேவோன் கான்வேவுக்கு பொருந்தும். கேமரூன் கிரீன் 25 கோடிக்கு வாங்கப்பட்டது எதிர்பார்க்கப்பட்டது ஒன்றாகும். அதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார். கொல்கத்தா அணிக்காக அவர் டாப் 3 இடங்களில் விளையாடுவது நன்றாக இருக்கும்” என்று கூறினார்.