ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் துணைக் கேப்டன் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார். அதனால் அபிஷேக் ஷர்மாவுடன் மீண்டும் சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 2023இல் அறிமுகமான சுப்மன் கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தவறியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.
அவருக்கு பதிலாக நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த சஞ்சு சாம்சனுக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் 3 சதங்கள் அடித்த சாம்சன் ஒரு வழியாக இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார். ஆனால் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்த தேர்வுக்குழு டி20 அணியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் களமிறக்கியது.
சாம்சனுக்கு வாய்ப்பு:
அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசி 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் மோசமான ஃபார்மில் இருந்தார். மறுபுறம் 2025 ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடிய சாம்சன் தென்னாப்பிரிக்க தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இருப்பினும் கடைசிப் போட்டியில் காலில் காயமடைந்த கில்லுக்கு பதிலாக விளையாடிய சாம்சன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் 37 ரன்கள் குவித்தார்.
அதனால் ஓப்பனிங்கில் கில்லை விட தம்மால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை சாம்சன் நிரூபித்தார். அதன் காரணமாக கடைசி நேரத்தில் கில்லை கழற்றி விட்ட தேர்வுக்குழு சாம்சனை தேர்ந்தெடுத்தது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் 2026 புத்தாண்டில் நடைபெறும் நியூஸிலாந்து டி20 தொடரில் பெரிய ரன்கள் குவித்தால் சம்சானின் ஓப்பனிங் வாய்ப்பை யாராலும் பறிக்க முடியாது என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் அட்வைஸ்:
இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவருடைய சில ஷாட்டுகள் சிறப்பாக இருந்தது. அவர் அடிக்கும் போது ஆபத்தானவராக அடிக்கிறார். இனிமேல் நல்ல துவக்கம் பெற்றால் 37 ரன்களில் அவுட்டாகாமல், அதை 73 ரன்களாக மாற்றுங்கள் என்பதை மட்டுமே நான் சாம்சனிடம் சொல்ல விரும்புகிறேன். அதை செய்தால் அணியிலிருந்து உங்களை யாரும் நீக்க முடியாது”
இதையும் படிங்க: அதை நிரூபிக்க ஒல்லியா இருக்க அவசியமில்லை.. கனமான ரோஹித் எப்போதும் தடுமாறியதில்லை.. மிஸ்ரா பதிலடி
“ஏனெனில் மக்கள் நீங்கள் அடிக்கும் 30, 40 ரன்களை மறந்து விடுவார்கள். கடைசிப் போட்டியில் சாம்சன் தமக்குக் கிடைத்த வாய்ப்பைக் கச்சிதமாக பிடித்துக் கொண்டார். அவருடைய ஆட்டத்தைப் பார்த்த தேர்வாளர்கள் கில்லிடம் நீங்கள் உலகக் கோப்பையில் விளையாட மாட்டீர்கள் என்று நேரடியாக தெரிவித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதனாலேயே கில் ஃபிட்டாக இல்லையென்று அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.



