இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெற திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவரை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.
அதனாலேயே 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ஆகிய அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை இந்தியாவின் கேப்டனாக வென்ற அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் அதற்காக அசராத ரோஹித் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஃபிட்டாக மாறியுள்ளார். அதன் பயனாக கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மை நிரூபித்தார்.
ஒல்லியாக இருக்க அவசியமில்லை:
அதே வேகத்தில் தென்னாப்பிரிக்க தொடரிலும் அசத்திய ரோஹித் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஒருவர் ஒல்லியாக இருப்பதை வைத்து ஃபிட்டாக இருக்கிறார் என்று அனைவரும் மதிப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்று முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ஒவ்வொருவருடைய உடலும் வித்தியாசமானது என்று தெரிவிக்கும் அவர் ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் மீதான விமர்சனங்களுக்கு கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “ரோஹித் சர்மா கம்பேக் கொடுத்து ஃபிட்டாகியுள்ளார். இதற்கு முன்பும் ஃபிட்டாக இருந்த அவருடன் நானும் விளையாடியுள்ளேன். மக்கள் அவரை கனமானவர் என்று அழைக்கலாம்”
எப்போதும் ஃபிட்டான ரோஹித்:
“ஆனால் கனமாக இருப்பதால் ரோஹித் மெதுவாக ஓடுகிறார் அல்லது ரன்கள் அடிக்க தடுமாறுகிறார் என்று நான் எப்போதும் உணர்ந்ததில்லை. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கண்ணோட்டங்கள் கருத்துக்கள் இருக்கிறது. ஆனால் இங்கே அனைவருடைய உடலும் ஒரே மாதிரியானது கிடையாது. இப்போதெல்லாம் ஃபிட்னஸ் என்பது பார்வையில் ஒருவர் எப்படி தெரிகிறார் என்பதை வைத்து மதிப்பிடப்படுகிறது”
இதையும் படிங்க: குறைந்தது 2 போட்டியிலாவது ஆடுங்க.. இந்திய வீரர்களுக்கு உத்தரவு போட்டுள்ள பி.சி.சி.ஐ – விவரம் இதோ
“ஒல்லியாக தெரிவதற்கு நீங்கள் உங்களுடைய உடலை முறையாக நிர்வகிக்க வேண்டும். நன்றாக சாப்பிட்டு ஃபிட்டாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் இயற்கையாக விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஃபிட்டாக தெரிய வேண்டும் என்பதற்காக வேலை செய்யக்கூடாது. இப்போதெல்லாம் சிலர் குறுகிய காலத்தில் தங்களை ஃபிட்டாக மாற்றிக் கொள்கிறார்கள் அவர்களுடைய பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்கள் பின்னாளில் பக்க விளைவுகளை சந்திக்கின்றனர். எனவே உடலளவில் முன்னேற நன்றாக சாப்பிட்டு உறங்கி வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.



