
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியானது நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 45 ரன்கள் குவித்தனர்.
பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அக்சர் பட்டேல் காலில் விழச்சென்ற சம்பவம் ஒன்று இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் மிகச்சிறப்பாக விளையாடி வந்த வேளையில் 81 ரன்களில் அக்சர் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஒருவேளை அக்சர் பட்டேல் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழக்கவில்லை எனில் போட்டி அவர்களுக்கு சாதகமாக கூட சென்றிருக்கலாம்.
இதையும் படிங்க : 5 ஸ்பின்னர்கள் எதற்கு என்பதை நிரூப்பித்த இந்தியா.. பாகிஸ்தானின் 21 வருட சாதனையை உடைத்து அபாரம்
அந்த அளவிற்கு அவரது விக்கெட் முக்கியமாக பார்க்கப்பட்ட வேளையில் அவரது விக்கெட்டை வீழ்த்திய அக்சர் பட்டேலை அனைவரும் பாராட்ட சென்ற வேளையில் விராட் கோலி மட்டும் அவரது காலில் விழ சென்றார். உடனே அதை கவனித்த அக்சர் பட்டேல் அவரும் தரையில் அமர்ந்து அவரை சிரித்தபடியே சமாளித்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.