ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்தத் தொடரில் தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தியது. அதே போல தங்களது கடைசி குரூப் போட்டியிலும் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
துபாயில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 250 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79, பாண்டியா 45, அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய நியூஸிலாந்து 45.3 ஓவரில் 205 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
5 ஸ்பின்னர்கள் விமர்சனம்:
அதனால் குரூப் சுற்றில் 3 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்ற இந்தியா செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. மறுபுறம் 2 வெற்றிகளைப் பெற்ற நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளத் தகுதி பெற்றது. முன்னதாக இந்தத் தொடரில் இந்திய அணிக்காக விளையாட 5 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது.
குறிப்பாக அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகிய 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடைசி நேரத்தில் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக பௌலிங் செய்து நல்ல ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அதனால் 5 ஸ்பின்னர்களுக்கு பதில் சிராஜை செய்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
உலக சாதனை பதிலடி:
அந்த சூழ்நிலையில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை விட இந்தப் போட்டியில் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 250 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்ததால் இந்தியா வெற்றி பெறுமா என்ற கேள்வி காணப்பட்டது. இருப்பினும் சுழலுக்கு கொஞ்சம் உதவி செய்த துபாய் பிட்ச்சில் இந்திய ஸ்பின்னர்கள் அபாரமாக பவுலிங் செய்து 9 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். குறிப்பாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5, குல்தீப் 2, அக்சர் படேல் 1, ஜடேஜா 1 என மொத்தம் இந்திய ஸ்பின்னர்கள் 9 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: ஸ்டுவர்ட் பின்னியின் 11 வருட ஸ்பெஷல் சாதனையை உடைத்த வருண்.. ஷமியை முந்தி அபார சாதனை
இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு போட்டியில் ஸ்பின்னர்களை வைத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2004 சாம்பியன்ஸ் ட்ராபியில் எட்ஜ்பஸ்டன் நகரில் கென்யாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் வைத்து 8 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. அந்த வகையில் 5 ஸ்பின்னர்கள் எதற்கு? என்ற விமர்சனங்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.



