
விராட் கோலி அண்டர் 19 அணியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி உலககோப்பையை வென்றுகொடுத்து 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச போட்டியில் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை பல எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகியும் தற்போது வரை அவரின் ஆட்டத்தின் மீதான பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை.
எப்போதும் ரன்களை குவித்து சதமடிக்கும் வேட்கையில் இருக்கும் அவர் தொடர்ந்து அனைத்து அணிகளுக்கும் எதிராகவும், அனைத்து நாடுகளிலும் சதமடித்து அசத்தியுள்ளார். தற்போது 31 வயதான இவர் சச்சின் டெண்டுல்கர் படைத்த பல சாதனைகளை அனாசயமாக முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இதுவரை ஆடிய போட்டிகளிலேயே தனக்கு பிடித்த ஆட்டத்தைப் பற்றி பேசியுள்ளார் விராட் கோலி. இதுகுறித்து அவர் கூறுகையில் :
கொரோனா ஓய்வு நேரத்தில் அனைவரும் தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் மற்றும் மறக்கமுடியாத தருணங்கள் பற்றி வீரர்கள் பேசிவரும் நிலையில் கோலியும் தனது கிரிக்கெட் அனுபவம் குறித்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அதன்படி தற்போது தனக்கு பிடித்த போட்டி குறித்து பேசிய கோலி கூறுகையில் : கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதனை தவிர்த்து 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மொகாலி மைதானத்தில் நடைபெற்ற டி-20 உலக கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டி எனக்கு மிகவும் பிடித்த போட்டியாக இருந்தது. அந்த போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டேன் என்று கூறினார் விராட் கோலி.
இதே போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் அடித்து வெற்றி பெற வேண்டியது இருந்தது. 51 பந்துகளில் 82 ரன்கள் விளாசிய 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற வைத்தார் விராட் கோலி. 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார் விராட் கோலி. இவரது தலைமையில் இந்திய அணி மூன்று விதமான போட்டிகளிலும் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டனான கோலி இதுவரை 86 டெஸ்ட் போட்டிகள், 248 ஒருநாள் போட்டிகள் மற்றும் 82 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் பல வருடங்கள் அவருக்கு இருப்பதால் கிரிக்கெட் இன்னும் நிறைய சாதனைகளை அவர் படைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.