இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்ததால் அகமதாபாத் ஆடுகளம் குறித்த விமர்சனத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக முன்வைத்தனர்.
மேலும் நாள்தோறும் அகமதாபாத் குறித்து சர்ச்சைகள் வெடித்து வந்த நிலையில் தற்போது இந்த மைதானத்தின் தன்மை குறித்து முதன் முதலாக கேப்டன் விராட் கோலி வாய் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சுழலும் தன்மை கொண்ட ஆடுகளம் தொடர்பான உரையாடலின் சத்தம் இப்போது ரொம்ப அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். சுழலுகின்ற ஆடுகளங்களை மட்டும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.
இந்தியாவில் இரண்டு நாட்களுக்குள் ஆட்டம் முடிந்தால் அதற்கு காரணம் ஆடுகளம் என்று விமர்சனம் வருகிறது. அதுவே நியூசிலாந்தில் நாங்கள் விளையாடிய போது மூன்று நாட்களில் ஆட்டம் முடிந்தது. அப்போது இந்திய அணி மோசமாக விளையாடியது என்று மட்டும்தான் பேசினார்களே தவிர ஆடுகளத்தை எந்த குறையும் சொல்லவில்லை.
இது மாதிரியான ஆடுகளங்களில் விளையாட வீரர்களுக்கு போதுமான திறன் இல்லை என்பது மட்டுமே நிதர்சனம் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4-வது போட்டியும் அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.