இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த பத்து வருடமாக உலகின் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். டெஸ்ட், டி20, ஒருநாள் என எதை எடுத்துக்கொண்டாலும் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி பல சாதனைகளை முறியடித்து இருக்கிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் என சர்வதேச அளவில் 70 சதங்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் ரன் மெஷினாக பார்க்கப்படும் கோலி உலகின் தலைசிறந்த பவுலர்கள் அணைவிக்கும் எதிராக ரன் வேட்டையை நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி போட்டிக்கு போட்டி பல சாதனைகளை புதிதாக படைத்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதன் முறையாக விராட் கோலி 11 வருட சாதனையை வீணடித்தார். அதாவது இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் தற்போது வரை 43 சதங்கள் விளாசி இருக்கிறார். ஆனால் கடந்த ஒரு வருடமாக கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 9 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்திருக்கிறார். விராட் கோலி ஒரு சில போட்டிகளில் 80 ரன்களுக்கு மேலாக எடுத்தாலும் அவரால் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் இப்படித்தான் நடந்தது. இதன் மூலம் அவர் ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி அந்த வருடம் மட்டும் 5 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு வரை ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்ததில்லை விராட் கோலி. ஒரு வருடத்தில் குறைந்தது ஒரு சதமாவது அடித்து விடுவார்.
தனது முதல் சதத்தை 2009ஆம் ஆண்டு பதிவு செய்த விராட் கோலி அதன் பின்னர் தொடர்ச்சியாக 2010, 2011, 2012 என 2019 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சதங்கள் அடித்து கொண்டே இருந்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு அவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் இந்த வருடத்திற்கான இந்திய அணியின் ஒருநாள் போட்டிகள் முடிவடைகின்றன. இதன்மூலம் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார் விராட் கோலி. ஆனால் கொரோனா பாதிப்பினால் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் இந்திய அணி பல ஒருநாள் தொடர்களில் பங்கேற்கமுடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோலி ஆண்டுதோறும் அடித்த சதங்களின் பட்டியல் :
2008: 0 (5 ஆட்டங்கள்)
2009: 1 (8 ஆட்டங்கள்)
2010: 3 (24 ஆட்டங்கள்)
2011: 4 (34 ஆட்டங்கள்)
2012: 5 (17 ஆட்டங்கள்)
2013: 4 (30 ஆட்டங்கள்)
2014: 4 (20 ஆட்டங்கள்)
2015: 2 (20 ஆட்டங்கள்)
2016: 3 (10 ஆட்டங்கள்)
2017: 6 (26 ஆட்டங்கள்)
2018: 6 (14 ஆட்டங்கள்)
2019: 5 (25 ஆட்டங்கள்)
2020: 0 (9 ஆட்டங்கள்)