இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று தர்மசாலாவில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு பெய்த கனமழை காரணமாக நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்திய அணி தற்போது டி20 போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அணியில் சில மாற்றங்களை நாங்கள் அவ்வப்போது எடுத்து வருகிறோம். அது அணியை வலுப்படுத்தவே செய்து வருகிறோம்.
குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் இந்திய அணியை மற்ற அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மற்ற அணிகளின் வீரர்கள் 9,10 ஆவது இடங்களில்கூட பேட்டிங் செய்யும் திறமையை கொண்டுள்ளார்கள். அதனை நாங்கள் தற்போது கவனித்து கருத்தில் கொண்டுள்ளோம்.
அதன்படி பேட்டிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆன சுந்தர், க்ருனால் பாண்டியா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இறுதிவரை பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்காகவே இவ்வாறு இந்திய அணியை தேர்வு செய்துள்ளோம் என்று கோலி தனது புதிய பிளானை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.