ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. தற்போது வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பெங்களூரு அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரு தோல்வி கூட பெறாத அணியாக தற்போது பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அதன்பிறகு கொல்கத்தா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு அணி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பெங்களூர் அணி தற்போது இந்த ஐபிஎல் தொடரில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை 43 ரன்களுக்குள் காலிசெய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு அணி இறுதியில் சில ரன்கள் விட்டுக்கொடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.
மும்பை மைதானம் பேட்டிங்க்கு சாதகம் என்பதால் இந்த இலக்கினை எளிதாக படிக்கல் மற்றும் கோலி ஆகியோர் செய்தனர். தங்களது அசாத்தியமான பேட்டிங்கால் விக்கெட் இழப்பின்றி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். கேப்டன் கோலி தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 6 பவுண்டரி என 72 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மேலும் இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை குவித்த முதல்வராக கோலி வரலாற்று சாதனையை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது தான் அரைசதம் கடந்ததும் கோலி அதனை கொண்டாடிய விதம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அதன்படி தான் அரைசதத்தை கடந்தவுடன் இந்த போட்டியை ரசித்து கொண்டிருந்த தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மாவை நோக்கி அவர் பேட்டை உயர்த்தி காண்பித்தார்.
Happiness! 🖤❤#RCB #ViratKohli #rcbians pic.twitter.com/vtIOFoq8tM
— Ankita || 🦋 (@Iam_Ankita_) April 22, 2021
அது மட்டுமின்றி அவருக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையான வமிகாவிற்கு இந்த அரை சதத்தை டெடிகேட் செய்யும் வகையில் அவர் தனது கையை குழந்தையை தாலாட்டுவது போன்று காண்பித்து அவருக்கு இந்த அரை சதத்தை அவரது குழந்தைக்காக அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். கோலியின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



