IND vs RSA : பஸ்ல வரும்போது தான் டிகாக் அந்த விஷயத்தை என்கிட்ட சொன்னாரு – ஆட்டநாயகன் கிளாசன் பேட்டி

Klassen-2
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே டெல்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய 2-வது போட்டியிலும் அதே பிளேயிங் லெவன் அணியுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Klassen 1

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு முக்கிய மாற்றமாக அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குவின்டன் டி காக் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிய கிளாசன் இந்திய அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியை பரிசாக அளித்தார். நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக பவர்பிளே ஓவர் முடிவதற்குள் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்னர் கேப்டன் தெம்பா பவுமா உடன் ஜோடி சேர்ந்த கிளாசன் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Klassen

இந்த போட்டியில் 46 பந்துகளைச் சந்தித்த அவர் 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி என 81 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் கிளாசன் பேசுகையில் : டி காக் பேருந்தில் வந்தபோதுதான் அவர் காயம் அடைந்ததை என்னிடம் கூறினார். மேலும் இரண்டாவது போட்டியில் நான் விளையாட மாட்டேன் என்றும் அந்த இடத்தில் நீ விளையாட தயாராக இரு என்று என்னிடம் கூறியிருந்தார்.

- Advertisement -

எனவே நான் விளையாடப் போவது எனக்கு போட்டிக்கு முந்தைய நாள் தான் தெரியவந்தது. இருந்தாலும் சரியான பயிற்சியை மேற்கொண்டேன். அதேபோன்று இந்த போட்டியில் புது பந்தை எதிர்கொண்ட போது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. எனவே நான் ஸ்பின்னர்களுக்கு எதிராக டார்கெட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : IND vs RSA : ஈஸியா ஜெயிச்சிட்டோம். ஆனா அவரு எங்களுக்கு பயத்தை காட்டிட்டாரு – தெ.ஆ கேப்டன் பவுமா பேசியது என்ன?

இந்திய அணிக்கு எதிராக நான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது பெருமையாக இருக்கிறது. இந்த போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன். அணியின் நிர்வாகமும் எனக்கு தொடர்ச்சியாக ஆதரவினை வழங்கி வருகிறது என்று ஆட்டநாயகன் கிளாஸன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement