- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ZIM : இதுக்குதான் அந்த செல்ஃபிஷ் முடிவா – மோசமான சாதனை படைத்த கேஎல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள், முழுவிவரம்

ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து முதல் போட்டியை விட மோசமாக செயல்பட்டு 38.1 ஓவரில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கைடனோ 7, இன்னசென்ட் கயா 16, மாதேவரே 2, கேப்டன் சகப்வா 2 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா 16 ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். அதனால் மொத்தமாக சரிந்த அந்த அணிக்கு சீன் வில்லியம்ஸ் 42 (42) ரன்களும் ரியன் புர்ள் 39* (47) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்கள். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்களை எடுத்தார். அதை தொடர்ந்து 162 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு இம்முறை தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 1 (5) ரன்னில் அவுட்டான நிலையில் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக 4 பவுண்டரியுடன் 33 (21) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அந்த நிலைமையில் வந்த இஷான் கிசான் 6 (13) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினாலும் அடுத்து வந்த சஞ்சு சாம்சனுடன் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி உறுதி செய்த தீபக் ஹூடா 25 (36) ரன்களில் அவுட்டானார். இறுதியில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 43* (39) ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்ததால் 25.4 ஓவர்களிலேயே 167/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் எளிதான வெற்றி பெற்றது.

மறுபுறம் சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்காக 8 பவுலர்களை களமிறக்கிய ஜிம்பாப்வேவுக்கு அதிகபட்சமாக ஜோங்வே 2 எடுத்த போதிலும் பேட்டிங்கில் பெரிய ரன்களை குவிக்க தவறியதால் மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 43* ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா முன்கூட்டியே கோப்பையை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

முதலில் பேட்டிங்:
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே வெறும் 191 ரன்களுக்கு சுருண்டதால் அப்போட்டியை பார்த்த ரசிகர்களுக்கு சுவாரசியமில்லாமல் அலுப்பு தட்டும் வகையில் அமைந்தது. அந்த நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்து ஜிம்பாப்வே பவுலர்களை புரட்டி எடுத்து 300 ரன்களைக் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் முடிவை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் டாஸ் வென்று மீண்டும் பந்து வீசுவதாக அறிவித்த அவர் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதைவிட முதல் போட்டியில் தவான் – கில் ஆகிய தொடக்க வீரர்களே 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற்று கொடுத்ததால் 2 மாதங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடும் அவர் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குபவராக கருதப்படும் அவர் அதற்கு முன் இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி தனது பார்மை சோதித்து பார்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

ரசிகர்கள் அதிருப்தி:
அதனால் இந்த போட்டியில் தவானுடன் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் சுமாராக பந்து வீசிய ஜிம்பாப்வேக்கு எதிராக 5 பந்துகளை சந்தித்து வெறும் 1 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி சென்றார். அதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை பேட்டிங்கில் சொதப்புவோம் என தெரிந்து தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்யவில்லையா என்று அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மேலும் முதல் போட்டியில் 192 ரன்களை விக்கெட்டே விடாமல் அசால்ட்டாக சேசிங் செய்த ஓப்பனிங் ஜோடியில் சுப்மன் கில்லை பிரித்து தாம் தொடக்க வீரராக களமிறங்கும் அவரது சுயநலமான முடிவே அவரின் சொதப்பலுக்கு காரணம் என்றும் நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். அத்துடன் இப்போட்டியில் 1 ரன்னில் அவுட்டான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் சவுரவ் கங்குலி 2 ரன்னில் அவுட்டானதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -
Published by