
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இந்தியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து 2வது நாள் முடிவில் 172-0 ரன்கள் குவித்துள்ளது.
களத்தில் ஜெய்ஸ்வால் 90*, ராகுல் 62* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் இந்தியா 218 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இந்தப் போட்டியில் போராடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இந்திய வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களில் சுமாராக விளையாடி வந்ததால் நிறைய விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து தொடரில் மோசமாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
அதனால் அவரை இத்தொடரில் நீக்க வேண்டும் என்று பலரும் விமர்சித்தார்கள். இருப்பினும் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் குவித்து அசத்தியும் தவறான தீர்ப்பால் அவுட்டானார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நேர்த்தியாக விளையாடும் அவர் இதுவரை 62* ரன்கள் குவித்துள்ளார்.
அந்த வகையில் தக்க சமயத்தில் ஃபார்முக்கு வந்த அவர் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 172* ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை ராகுல் – ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர். கடைசியாக 2004ஆம் ஆண்டு வீரேந்திர சேவாக் – ஆகாஷ் சோப்ரா ஆஸ்திரேலியாவில் 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள்.
இதையும் படிங்க: 34 சிக்ஸ்.. ஜோ ரூட் சாதனை சமன்.. மெக்கல்லம் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. மாபெரும் உலக சாதனை
மேலும் 2000ஆம் ஆண்டு ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அதிக முறை 100+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவிய இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையையும் ராகுல் சமன் செய்துள்ளார். சேவாக், ராகுல் ஆகிய இருவருமே 2000ஆம் ஆண்டுக்குப்பின் சேனா நாடுகளில் இந்தியா தலா 3 முறை 100+ ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியுள்ளார்கள்.