ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் இந்தியா அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக இந்தியா தங்களது கடைசி குரூப் சுற்று போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி மார்ச் இரண்டாம் தேதி துபாயில் மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது.
அதில் களமிறங்கும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் விளையாடிய 7வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். 2008இல் அறிமுகமான அவர் 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி உலகிலேயே வேகமாக 14000 ரன்கள் அடித்து 51 சதங்கள் விளாசி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான கடந்தப் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
வாழ்த்த வார்த்தையில்ல:
இந்நிலையில் 300வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு சக இந்திய வீரர் கேஎல் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 300 போட்டிகளில் விளையாடும் அளவுக்கு நீண்ட காலமாக அவர் இந்திய கிரிக்கெட்டின் வேலையாளாக இருப்பதாக ராகுல் பாராட்டியுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விராட் கோலி அபாரமாக விளையாடி இன்னும் சதங்களை அடிக்க வேண்டும் என்று ராகுல் வாழ்த்தியுள்ளார்.
இது பற்றி ராகுல் பேசியது பின்வருமாறு. “300 என்பது நிறைய ஒருநாள் போட்டிகள். விராட் கோலி எந்தளவுக்கு நல்ல பிளேயர் என்பதை சொல்வதற்கு வார்த்தைகள் என்னிடம் குறைவாக இருக்கிறது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன ஒரு சிறந்த வேலையாளாக செயல்பட்டு வருகிறார். கடந்தப் போட்டியில் அவர் சதத்தை அடித்ததைப் பார்த்தது உண்மையான மகிழ்ச்சியை கொடுத்தது”
வாழ்த்திய ராகுல்:
“தற்போது நன்றாக பேட்டிங் செய்யும் அவரைப் போன்ற திறமைக் கொண்டவர் பெரிய போட்டியில் சரியான நேரத்தில் வெற்றியை உரித்தாக்கும் சதத்தை அடித்தார். விராட் கோலி, ரோஹித் சர்மா, கில் ஆகியோர் எங்களுடைய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மிகவும் சிறப்பாக பந்தை அடித்த ஸ்ரேயாஸ் ஐயரும் தனது பங்காற்றி வருகிறார்”
இதையும் படிங்க: இதுக்கு தான் 383 கோடியா? இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தானின் காமெடியை பார்த்து சிரித்த ஆஸி அணி
“கண்டிப்பாக விராட் கோலி எங்கள் அணியின் முக்கியமான அங்கம். பெரிய போட்டிகளில் விராட், ரோஹித் பெரிய ரன்கள் அடிப்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களால் அதை நீண்ட வருடங்களாக செய்ய முடிகிறது. அவர்கள் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். அதில் அவர்கள் இன்னும் நிறைய சதங்கள் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.



