ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 28ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற்ற அந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் 1 புள்ளியைப் பெற்ற ஆஸ்திரேலியா மொத்தம் 4 புள்ளிகளுடன் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் அப்போட்டியையும் சேர்த்து 3 புள்ளிகளை மட்டுமே பெற்ற ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.
முன்னதாக அந்தப் போட்டியில் 274 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா 12.5 ஓவரில் 109/1 என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை வந்தது. தொடர்ந்து சுமார் 2 மணி நேரங்கள் பெய்த மழை ஒரு வழியாக விட்டது. அப்போது மைதானத்தை முழுமையாக தார்பாய் கொண்டு மூடாததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
சிரித்த ஆஸி:
இந்தியாவில் பெங்களூரு, கொல்கத்தா போன்ற நிறைய மைதானங்களில் மழை பெய்தால் உடனடியாக அடுத்த 10 – 20 நிமிடங்களுக்குள் நீர் வெளியேறும் அளவுக்கு வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது போன்ற வசதியை பாகிஸ்தான் வாரியம் செய்யாததால் லாகூர் மைதானத்தில் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நின்றது. அதை வெளியேற்றுவதற்கு மைதானத்தில் நவீன இயந்திரங்களும் இல்லை.
அதன் காரணமாக தண்ணீரை வெளியேற்றுவதற்காக மைதானத்தில் இருந்த நிர்வாகிகள் வீடு துடைக்கும் மாஃப் கருவிகளை வைத்து தள்ளினார்கள். அப்படி தள்ளும் போது தண்ணீர் பக்கவாட்டில் சென்றது. அப்படி தள்ளிய 3 பராமரிப்பாளர்களில் ஒருவர் வழுக்கிக் கொண்டு நடந்தார். அந்த வகையில் ஐடியா இல்லாமல் தண்ணீரை வெளியேற்ற முயற்சித்த பாகிஸ்தான் மைதான பராமரிப்பாளர்களின் காமெடியை பார்த்து பெவிலியனில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் சிரித்தனர்.
இதுக்கா 383 கோடி:
மேலும் வாலியில் பஞ்சை வைத்து தண்ணீரை பிழிந்து எடுத்து வெளியேற்றவும் அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் நிறைய தண்ணீர் இருந்ததால் அவர்களுடைய முயற்சி வீணானததை தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். சமீபத்திய வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற சாதாரண இருதரப்பு தொடர் போட்டிகளில் இது போன்ற சூழ்நிலைகள் வந்த போது பாகிஸ்தான் ரசிகர்கள் வம்படியாக வந்து சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.
இதையும் படிங்க: திரில்லே இல்ல.. 2027 உ.கோ முன் ஒன்டேவை காப்பாற்ற பந்தை மாத்துங்க.. ஐசிசிக்கு அஸ்வின் ஆலோசனை
ஆனால் தற்போது ஐசிசி தொடரின் முக்கியமான போட்டியில் மழை நீரை வெளியேற்றும் அளவிற்கு பாகிஸ்தான் வாரியம் வசதிகளை செய்யவில்லை. இத்தனைக்கும் சுமார் 383 கோடி ரூபாய் செலவில் இத்தொடருக்காக பாகிஸ்தான் வாரியம் தங்களது மைதானத்தை புதுப்பித்தது. அதையும் தாண்டி இப்படி மழைநீர் என்றதால் இதற்காக அவ்வளவு செலவு செய்தீர்கள் என்று பாகிஸ்தான் வாரியத்தை தற்போது இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.



