இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 296 ரன்கள் குவிக்க 297 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியானது துவக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டம் காரணமாக 25 ஓவர்கள் வரை நல்ல நிலையில் இருந்தது.

அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியில் 265 ரன்களை மட்டுமே குவித்ததால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : எங்களுக்கு இது ஒரு நல்ல போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் இருந்து நிறைய விடயங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
நாங்கள் பந்துவீச்சின் போது சிறப்பாகவே இந்த போட்டியை துவங்கியிருந்தாலும் மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அதே போன்று நாங்கள் பேட்டிங் செய்யும்போது முதல் 20 முதல் 25 ஓவர்கள் வரை போட்டி எங்களிடமே இருந்தது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. 20 ஓவர்கள் வரை ஆட்டம் எங்கள் கையில் இருந்த பின்னர் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே நாங்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

விராட் மற்றும் ஷிகர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். மேலும் களத்தில் சிறிது நேரம் நின்றால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்றும் அவர்கள் இருவரும் கூறி இருந்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் எங்களால் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் கூடுதலாக இரண்டு ரன்கள் வரை விட்டுக் கொடுத்து விட்டதாக நினைக்கிறேன்.
இதையும் படிங்க : வெங்கடேஷ் ஐயர் முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீசாதது ஏன்? – ஷிகர் தவான் கொடுத்த விளக்கம்
தென்ஆப்பிரிக்க வீரர்கள் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனால் இந்திய அணியால் அது முடியாமல் போனது. நாங்கள் செய்த இந்த தவறு காரணமாகவே தோல்வியை சந்தித்தோம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.



