விராட் கோலியின் டி20 சாதனையை அதிவேகமாய் உடைத்து கேஎல் ராகுல் புதிய சாதனை – என்னனு பாருங்க?

- Advertisement -

மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181/6 ரன்கள் எடுத்தது. டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பியதால் 62/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில் அந்த அணிக்கு அதிக பட்சமாக நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 96 (64) ரன்கள் விளாசி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டாலும் சரிந்த தனது அணியை தூக்கி நிறுத்தினார்.

Faf Du Plessis 96

- Advertisement -

லக்னோ சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஜேசன் ஹோல்டர் மற்றும் சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 182 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர் குவின்டன் டி காக் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மணிஷ் பாண்டே பொறுப்பில்லாமல் 6 (8) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த நிலையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த கேப்டன் ராகுலும் 30 (24)ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

பெங்களூரு வெற்றிநடை:
அதனால் ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்த அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய க்ருனால் பாண்டியா 5 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 42 (28) ரன்கள் எடுத்து வெற்றிக்கான நம்பிக்கை கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் தீபக் ஹூடா 13 (14), ஆயுஷ் படோனி 13 (13) போன்ற இளம் வீரர்கள் பெரிய ரன்கள் அடிக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இறுதியில் போராடிய மார்கஸ் ஸ்டாய்நிஸ் அதிரடியாக 24 (15) ரன்களும் ஜேசன் ஹோல்டர் 16 (9) ரன்களும் எடுத்து அவுட்டானதால் 20 ஓவர்களில் 163/8 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ பரிதாபமாக தோற்றது.

Marcus Stoinis 23.jpeg

மறுபுறம் பேட்டிங்கில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசி நேரத்தில் அசத்திய பெங்களூரு இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்து ஜோஷ் ஹேசல்வுட் முக்கிய பங்காற்றினாலும் 96 ரன்கள் எடுத்து அதைவிட முக்கிய பங்காற்றிய கேப்டன் டு பிளசிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

கேஎல் ராகுல் சாதனை:
மறுபுறம் பந்துவீச்சில் விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்களை ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து அவுட் செய்து அபாரமாக பந்துவீசிய லக்னோ கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது. அத்துடன் பேட்டிங்கிலும் சொதப்பிய அந்த அணி இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும் கூட அந்த அணி தற்போது டாப் 4 இடங்களுக்குள் இருப்பதால் வரும் போட்டிகளில் வெற்றிகளை பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தப் போட்டியில் லக்னோ தோற்ற போதிலும் 24 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 30 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய கேப்டன் கேஎல் ராகுல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார். இதன் வாயிலாக டி20 போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 10-வது இந்திய பேட்ஸ்மென் என்ற பெருமையை அவர் பெற்றார்.

- Advertisement -

அதிவேக 6000:
அதைவிட டி20 போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன் என்ற நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 184 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை எடுத்த விராட் கோலி இதுநாள் வரை அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். தற்போது வெறும் 166 இன்னிங்ஸ்களிலேயே 6000 ரன்களை கடந்துள்ள கேஎல் ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.

KL Rahul Century

அத்துடன் உலக அளவில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்த 3-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முதல் 2 இடங்களில் ஜாம்பவான் கிறிஸ் கெயில் மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் உள்ளனர். அந்த பட்டியல் இதோ:
1. கிறிஸ் கெயில் : 162 இன்னிங்ஸ்
2. பாபர் அசாம் : 165 இன்னிங்ஸ்
3. கேஎல் ராகுல் : 166* இன்னிங்ஸ்
4. ஷான் மார்ஷ் : 180 இன்னிங்ஸ்
5. விராட் கோலி : 184 இன்னிங்ஸ்

இதையும் படிங்க : வேட்டி சட்டையில் குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே வீரர்கள் – கேம்பிற்குள் நடைபெற்று முடிந்த வீரரின் நிச்சயதார்த்தம்

இத்துடன் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் மும்பைக்கு எதிரான போட்டியில் அடித்த சதம் உட்பட 265 ரன்களை எடுத்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பிக்காக போட்டி போட்டு வருகிறார்.

Advertisement