இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ள வேளையில் இந்த தொடரில் இருந்தே வெற்றி பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்திய அணியின் வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
எங்களது ஜோடி இங்கிலாந்து மண்ணில் சாதிக்கும் : கே.எல் ராகுல்
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் 8 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பின்னர் இடம்பெற்றுள்ள கருண் நாயரின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதோடு அனுபவ வீரரான அவருக்கு நேரடியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முச்சதம் அடித்த அவர் அதன்பின்னர் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டார். பின்னர் தனது தொடர் போராட்டத்தினால் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், கருண் நாயரின் நெருங்கிய நண்பருமான கே.எல் ராகுல் இந்த இங்கிலாந்து தொடரில் தங்களால் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் இருவருமே 11 வயதில் இருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம். எனவே அவரது ஏற்றத்தாழ்வுகள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே கருண் நாயர் மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஏற்கனவே கர்நாடக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கவுன்டி கிரிக்கெட்டிலும் விளையாடி தனது பலத்தை கூட்டியுள்ளார்.
தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த இங்கிலாந்து தொடரிலும் அசத்துவார் எங்களது ஜோடி இந்த இங்கிலாந்து தொடரில் நல்ல ரன் குவிப்பை வழங்கும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என கே.எல் ராகுல் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :
இதையும் படிங்க : வாழ்வில் முதல் முறையா இந்தியாவின் தூண்கள்.. விராட், ரோஹித் இல்லாம இதை செய்றேன்.. ராகுல் பேட்டி
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாதது வித்தியாசமான உணர்வை தருகிறது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாகவே அவர்கள் இந்திய அணிக்காக பெரிய பங்காளிப்பினை வழங்கி இருந்தனர். அவர்கள் இல்லாமல் ஓய்வறைக்கு செல்வது வித்தியாசமாக இருந்தாலும் அவர்களது முடிவை நாம் மதிக்க வேண்டும் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.



