இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை.
அதன் காரணமாக கேஎல் ராகுல் மிகவும் பொறுப்புடன் விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு போராட வேண்டிய நிலையில் இருக்கிறார். ஏனெனில் 2014ஆம் ஆண்டு அறிமுகமான அவர் விராட், ரோஹித் ஆகியோருக்குப் பின் இந்திய பேட்டிங் துறையில் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ளார். குறிப்பாக 2018, 2021 ஆகிய வருடங்களில் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அவர் சதத்தை அடித்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
கேரியரில் முதல் முறையாக:
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டின் தூண்கள் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தம்முடைய கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக அந்த ஜாம்பவான்களுடன் சேர்ந்து விளையாடப் போவதில்லை என்பது ஒரு விதமான ஏமாற்ற உணர்வைக் கொடுப்பதாகவும் ராகுல் கூறியுள்ளார். இது பற்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சமூக வலைதளத்தில் ராகுல் பேசியது பின்வருமாறு.
“விராட் ரோஹித் ஆகியோர் கடந்த தசாபத்திற்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் தூண்களாக இருந்தனர். அப்படிப்பட்ட அவர்கள் இம்முறை இல்லாதது மிகப்பெரிய இழப்பு. என்னுடைய ஒட்டுமொத்த கேரியரில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா இல்லாத இந்திய அணியில் நான் நடந்து சென்றதில்லை. இதுவரை நான் 50க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன்”
மிஸ் செய்யும் ராகுல்:
“அந்த 50+ போட்டிகளில் எப்போதும் ஒன்று ரோஹித் சர்மா அல்லது விராட் கோலி அல்லது இருவருமே அணியில் ஒரு அங்கமாக இருந்தார்கள். தற்போது அவர்கள் இல்லாத இந்திய அணியில் நடப்பது கொஞ்சம் வினோதமான உணர்வைக் கொடுக்கிறது. இருப்பினும் நீங்கள் அவர்களுடைய ஓய்வு முடிவை மதிக்க வேண்டும்”
இதையும் படிங்க: விட்டால் காணாம போய்ருக்கும்.. என்னால சக்திய வெச்சு பட்டோடி பெயரை காப்பாத்திட்டேன்.. சச்சின் பெருமிதம்
“அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் நாட்டுக்காக கொடுத்துள்ளார்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக என்றும் நிலைத்திருப்பார்கள். ஆனால் இது மற்ற வீரர்கள் காலடி வைத்து நாட்டுக்காக விளையாட வேண்டிய நேரமாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2007க்குப் பின் இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க இளம் இந்திய அணி போராட உள்ளது.



