ஹனிமூன் அப்றம் தான், இந்தியாவுக்கு விளையாட பயிற்சிகளை துவங்கிய ராகுல் – கம்பேக் விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அவர்களது மகள் அதியா செட்டியை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்த அவர்கள் பெற்றோர்களது சம்மதத்துடன் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பெரிய அளவில் யாருக்கும் அழைப்பு விடுக்காத அந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவித்தன. மேலும் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய நெருங்கிய நண்பர்கள் விலை உயர்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பரிசாக கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அத்துடன் சல்மான் கான், ஜேக்கி செராப் போன்ற பாலிவுட் நடிகர்களும் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்த நிலையில் தனது மகளுக்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை சுனில் செட்டி பரிசாக கொடுத்தார். அப்படி ஆடம்பரமாக நடைபெற்ற அந்த திருமணத்திற்காக நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்பெஷல் அனுமதியுடன் கேஎல் ராகுல் விலகினார். அந்த நிலையில் திருமணம் முடிந்த ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தேனிலவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்கான பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.

- Advertisement -

கம்பேக் எப்போது:
திருமணம் முடித்த கையுடன் தமது சொந்த ஊரில் பயிற்சிகளை தொடங்கியுள்ள அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். நியூசிலாந்து தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் அடுத்ததாக நவம்பர் 9ஆம் தேதி முதல் துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ராகுல் இடம் பெற்றுள்ளார். வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

அந்த முக்கியமான தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றுவதற்காகவே முன்கூட்டியே கேஎல் ராகுல் தேவையான பயிற்சிகளை துவங்கியுள்ளார். சொல்லப்போனால் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு விமர்சனங்களை சந்தித்த அவர் 2022 ஐபிஎல் தொடருக்குப்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய பின் பார்மை இழந்து ரன்களை குவிக்க முடியாமல் ரொம்பவே தடுமாறி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் அடித்து நொறுக்க வேண்டிய ஒப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவரது பேட்டிங் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இந்தியாவை கேப்டனாக வழி நடத்திய அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் படுமோசமாக செயல்பட்டு பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதே போல் கேப்டனாகவும் முக்கிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறிய அவர் இதர வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் கேப்டனாக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்ததாக ரசிகர்கள் கலாய்த்தார்கள்.

இருப்பினும் சொதப்பலாக செயல்பட்டும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருப்பதுடன் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொறுமையிழந்த பிசிசிஐயும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவரது துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்தை அதிரடியாக பறித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிர்வாகத்திலும் அதிருப்தியை பெற்றுள்ள அவர் இந்த அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க விரைவில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி ரொம்பவே தைரியசாலி, நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்காம தில்லா பேட்டிங் செஞ்சாரு – 2018 பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

அதனாலேயே திருமணம் முடிந்த கையுடன் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு இழந்த தனது பார்மை மீட்டெடுத்து கம்பேக் கொடுப்பதற்காக ராகுல் கடுமையான வலை பயிற்சிகளை இப்போதே துவங்கியுள்ளார். இந்த சமயத்தில் அவரது மனைவி வந்த நேரமும் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement