இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அண்மையில் வங்கதேச நாட்டில் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து அடுத்ததாக தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த தொடரில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் துவக்க வீரர்களா கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடினர். அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆனால் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் தான் இந்திய அணி ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது.

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி எப்பொழுதுமே இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் களமிறங்கும். ஆனால் இம்முறை மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சார்களுடன் மட்டுமே களமிறங்கியுள்ளது.
அதன்படி சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்தனர். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி எடுத்த இந்த முடிவு தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : IND vs BAN : முக்கிய வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டம், ஆரம்பத்திலேயே திணறும் இந்தியா – உணவு இடைவெளி ஸ்கோர் இதோ
இருப்பினும் இந்த மைதானம் முழுக்க முழுக்க சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதாலயே அணி தேர்வு இவ்வாறு அமைந்ததாக கூறப்படுகிறது. பங்களாதேஷ் அணியும் அதே போன்று மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



