வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த 2 திரில் வெற்றியை பதிவு செய்த ஷிகர் தவன் தலைமையிலான இந்தியா ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் கோப்பையை வென்று காட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜூலை 27-ஆம் தேதி இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பும் நிலையில் அவருடன் ரிஷப் பண்ட் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட மேலும் முக்கிய வீரர்கள் அணிக்குத் திரும்புகின்றனர். அதனால் மேலும் பலமடைந்துள்ள இந்தியா ஒருநாள் தொடரை போல டி20 தொடரையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் சந்தேகம்:
முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் காயத்தைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஐபிஎல் 2022 தொடரில் லக்னோவின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் அது முடிந்ததும் சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர் தொடர் துவங்க ஒருநாள் முன்பாக துரதிஷ்டவசமாக காயத்தால் வெளியேறினார்.

அதிலிருந்து குணமடைவதற்காக ஜெர்மனி சென்று பிரத்தியேக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தாயகம் திரும்பிய அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் ஜாம்பவான் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி பந்துவீச்சில் பயிற்சிகளை மேற்கொண்டார். அதனால் ரோகித் சர்மாவுடன் வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கத் தயாராக இருந்த அவருக்கு கடைசி நேரத்தில் கரோனா ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் அடுத்தடுத்த சோதனைகளில் குணமடைந்து வரும் ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் கடைசி 2 போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விலகும் ராகுல்:
அந்த நிலைமையில் மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் குணமடையாத காரணத்தாலும் காயமும் இன்னும் முழுமையாக சரியாகாத காரணத்தாலும் ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலிருந்து கேஎல் ராகுல் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அடுத்ததாக ஜிம்பாப்வேயில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மீண்டும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுப்பார்கள் என்பதால் அதற்கு முன்பாக முழுமையாக குணமடைந்து அந்த தொடரில் அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி டி20 கிரிக்கெட்டில் வலுவான வீரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடக்க வீரராக களமிறங்கும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவிக்க போவதில்லை என்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே சமீபத்திய தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அசத்திய இஷான் கிசன் அணியில் இருப்பதுடன் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் புதிய முயற்சியாக ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.
எனவே அந்த இருவரில் யாரேனும் ஒருவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்று தெரியவந்துள்ளது. இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுலுக்கு இதிலிருந்து முழுமையாக குணமடைய மேலும் ஒரு வாரம் தேவைப்படுகிறது. இருப்பினும் அவருக்காக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாற்று வீரரை அனுப்பப் போவதில்லை. ரிஷப் பண்ட் அல்லது இஷான் கிசான் ஆகியோரில் யாரேனும் ஒருவர் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார்கள்.
இதையும் படிங்க : IND vs WI : 3 ஆவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்த கீ பிளேயரை களமிறக்கும் – வெஸ்ட் இண்டீஸ் அணி
தரமான வீரர்கள் ஏற்கனவே இருப்பதால் மாற்று வீரரை அனுப்ப பிசிசிஐ விரும்பவில்லை” என்று கூறினார். காயத்தால் கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை தவறவிட்ட கேஎல் ராகுல் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரையும் கடைசி நேரத்தில் தவற விட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.



