காயத்திற்கான சிகிச்சை எடுக்க ஜெர்மனி செல்லவுள்ள கே.எல் ராகுல் – அப்படி என்ன பிரச்சனை தெரியுமா?

Rahul
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் போட்டி துவங்கும் ஒரு நாளைக்கு முன்னதாக திடீரென காயம் காரணமாக கேஎல் ராகுல் அணியில் இருந்து வெளியேறினார். மேலும் அவர் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்த தொடரில் விளையாடமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது.

Rahul-1

அப்படி ராகுல் காயம் என்று கூறி வெளியேறியதும் அவர் வேண்டுமென்றே சாக்கு போக்கு சொல்லி அணியில் இருந்து வெளியேறி இருந்ததாக பலரும் குறை கூறி இருந்தார்கள். ஆனால் உண்மையில் காயம் காரணமாக வெளியேறிய அவர் தற்போது அடுத்ததாக ஜூலை 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியையும் தவற விட்டுள்ளார்.

- Advertisement -

அதே போன்று அடுத்தமாதம் எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற இருக்கும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. அப்படி கே.எல் ராகுலுக்கு என்ன ஆனது? அவரது காயம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

kl rahul

அதன்படி ஐபிஎல் தொடரில் விளையாடிய போது இடுப்பு பகுதியில் காயமடைந்த கே.எல் ராகுல் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முறையான ஓய்வு இன்றி தொடர்ச்சியாக விளையாடியதால் அவருக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக இடுப்புப் பகுதியில் வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறிய அளவில் இருந்த காயத்தின் தன்மையை பெரிதாக அவர் கவனிக்காததால் தற்போது காயத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு தற்போது தொடர்ச்சியாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வரும் கே.எல் ராகுல் சிகிச்சைக்காக ஜூலை 1-ஆம் தேதி ஜெர்மனி செல்ல உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்த பின்னர் சிறிது காலம் ஓய்வு எடுப்பார் என்றும் அதன் பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : 4 ஆவது போட்டி நடைபெறும் ராஜ்கோட் மைதானத்தில் இன்று போட்டி நடைபெறுவதில் – ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான கே.எல் ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பதால் அந்த போட்டியில் புதிய துணை கேப்டன் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக மாயங்க் அகர்வால் இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement