இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
லார்ட்ஸ் தோல்வி குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட கே.எல் ராகுல் :
இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸ்சின் போது இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை என்கிற நிலையில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியானது 170 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பரிதாப தோல்வியையும் சந்தித்திருந்தது.
இந்த லார்ட்ஸ் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு எவ்வளவோ கடுமையாக போராடியும் நெருக்கமாக வந்து தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை அளித்துள்ளது. அதோடு மைதானத்தில் இருந்த இந்திய வீரர்களும் இந்த போட்டியில் அடைந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் வருத்தத்தில் காணப்பட்டனர்.
இந்நிலையில் இந்த லார்ட்ஸ் போட்டியில் முடிந்து சில தினங்கள் ஆகியுள்ள வேளையில் தற்போது இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான கே.எல் ராகுல் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டதாவது : சில போட்டிகள் வெற்றி, தோல்வி என்ற முடிவுகளை தாண்டி உங்களுடைய கேரக்டரையும், உறுதியையும் சோதிக்கும். அந்த வகையில் இந்த லார்ட்ஸ் போட்டி எங்களது திறமையை சோதித்துள்ளது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
இதையும் படிங்க : பும்ராவுக்கு எதிரா இப்படியா பண்ணுவீங்க? பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரை சாடிய – முகமது கைப்
ஆனாலும் நாங்கள் இதிலிருந்து கிடைத்த பாடங்களை வைத்து இன்னும் வலிமையாக மாறுவோம் என கே.எல் ராகுல் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த தோல்வி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்த முகமது சிராஜ் வெற்றி தோல்வியை தாண்டி இந்த போட்டி எங்களுக்கு நிறைய படங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.



