
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கு அடுத்ததாக நவம்பர் 30ஆம் தேதி துவங்கும் ஒருநாள் தொடரில் வென்று தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகியுள்ளது. அந்தத் தொடரில் கேப்டன் சுப்மன் கில் காயத்தால் விலகியுள்ளதால் ஓப்பனிங்கில் விளையாட ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் களமிறங்கப் போவது யார்? என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல சஞ்சு சாம்சன் கடைசியாக 2023இல் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதத்தை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் அப்போதிலிருந்து 2 வருடமாகியும் அவருக்கு மறுவாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த சூழ்நிலையில் இத்தொடரில் அவருக்கு பெஞ்சில் அமரும் கூட வாய்ப்பு கிடைக்காதது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2023இல் கார் விபத்தால் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் இப்போது தான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார். எனவே அவருடைய இடத்தில் விளையாடிய சாம்சன் போன்றவர்கள் மறுவாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாக ராகுல் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே போல கம்பேக் கொடுத்துள்ள ருதுராஜ்க்கு இத்தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ராகுல் பேசியது பின்வருமாறு. “அணியுடன் நீண்ட காலம் இருந்த ரிஷப் காயத்தால் தவற விடப்பட்டார். அவரால் அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பதை அனைவரும் பார்த்துள்ளனர். அதனால் ஏற்கனவே அணியில் இடம் பிடித்து அசத்தியவர்கள் தங்களுடைய வாய்ப்புக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியுள்ளது”
“இத்தொடரில் விக்கெட் கீப்பராக நான் இருப்பேனே அல்லது பண்ட் இருக்கிறாரா என்பது நாளை தெரியும். அதே சமயம் அவர் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு கூட போதுமானவர். ஒருவேளை அவர் பிளேயிங் லெவனுக்குள் வந்தால் கீப்பராக இருப்பார். நான் களத்தில் இருப்பேன். டாப் க்ளாஸ் பிளேரான ருதுராஜ் தமக்குக் கிடைத்த குறுகிய வாய்ப்பைப் பயன்படுத்தி தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நமக்கு காண்பித்துள்ளார்”
இதையும் படிங்க: தப்பை ஒத்துக்கிறோம்.. இன்னும் 6 மாசத்துல அவரை மாதிரி சீனியர்களிடம் கேட்டு சுழலில் முன்னேறுவோம்.. ராகுல்
“துரதிஷ்டவசமாக ஒருநாள் அணியில் டாப் 5 – 6 இடங்களில் இருப்பவர்கள் சிறப்பாக விளையாடி பொருந்தியுள்ளனர். அதனால் ருதுராஜ் போன்றவருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காததற்காக நீங்கள் வருந்த வேண்டியுள்ளது. இருப்பினும் இப்போது அவருக்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க நாங்கள் உற்சாகத்துடன் உள்ளோம். அவருடைய திறமையின் மேல் கேள்வியில்லை. இது சரியான வாய்ப்பு மற்றும் நேரத்தைப் பற்றியதாகும். இத்தொடர் அவருக்கு வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.