நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த அவர் 2019 காலகட்டங்களில் துவக்க வீரராக ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடினார். அதனால் இந்திய அணியில் சிகர் தவானை பின்னுக்குத் தள்ளிய அவர் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றதுடன் துணைக் கேப்டன் அந்தஸ்தையும் பெற்றார்.
இருப்பினும் ஒரு கட்டத்திற்கு பின் மெதுவாக விளையாடிய அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் சுமாராக பேட்டிங் செய்து தோல்விக்கு முக்கிய காரணமானார். அதனால் அவருடைய துணை கேப்டன்ஷிப் பொறுப்பை பறித்த பிசிசிஐ மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் சூப்பராக விளையாடும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் அசத்திய ராகுல் 2023 உலகக் கோப்பையில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார்.
ராகுல் ஓய்வு:
அதன் பின் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்து வெளியேறிய அவர் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடி லக்னோவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதற்கிடையே ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி விட்டார். அதனால் தற்சமயத்தில் இந்திய அணியில் ராகுல் நிலையான இடத்தை இழந்துள்ளார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி கே.எல் ராகுல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒரு அறிவிப்பை நான் வெளியிட உள்ளேன், அதற்காக காத்திதிருங்கள்” என்று பதிவிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் அவரது பெயரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் 32 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் அதற்குள் எப்படி ஓய்வை அறிவிக்க முடியும்? என்று ரசிகர்கள் குழம்பினர்.
உண்மை என்ன:
அந்த அறிவிப்பில் கூறப்பட்டது பின்வருமாறு. “நீண்ட சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து எனது ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த முடிவு எளிதானதல்ல. ஏனெனில் விளையாட்டு பல ஆண்டுகளாக என் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. எனது வாழ்க்கை முழுவதும் எனது குடும்பத்தினர், நண்பர்கள், அணியினர் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 132 ரன்ஸ்.. திருப்பி கொடுக்கும் வங்கதேசம்.. தடுமாறும் பாகிஸ்தான் பவுலர்கள்.. தவறாகும் தைரிய முடிவு
உடனடியாக அந்தப் பதிவு வைரலானதால் ராகுல் ஓய்வு பெற்று விட்டாரா? என்று ரசிகர்கள் குழம்பினர். ஆனால் உண்மையில் கேஎல் ராகுல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ பெயரை மட்டும் எடுத்த யாரோ ஒருவர் ஓய்வு பற்றிய மற்ற செய்திகளை தாமாகவே எடிட் செய்து அவருடைய பெயரில் பரப்பியுள்ளார். ஏனெனில் கேஎல் ராகுலின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அந்த செய்தி காணவில்லை. அந்த வகையில் வேறு ஏதோ விஷயத்துக்காக ராகுல் வெளியிட்ட பதிவை வைத்து யாரோ ஒருவர் ரோடு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



