
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 60ஆவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் டெல்லிக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு தடுமாற்றமாக விளையாடிய டு பிளேஸிஸ் 5 (10) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
ஆனால் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 35 பந்துகளில் அரை சதத்தை தொட்டார். அவருடன் சேர்ந்து விளையாடிய அபிஷேக் போரில் இரண்டாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 (19) ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக வந்த கேப்டன் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாட முயற்சித்து 25 (16) ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து குஜராத் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் சதத்தை அடித்தார். இறுதியில் 14 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட ராகுல் 112* (65) ரன்கள் குவித்து அசத்தினார்.
அவருடன் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 21* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் டெல்லி 199/3 ரன்களை எடுத்து அசத்தியது. குஜராத்துக்கு அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிசோர் தலா 1 விக்கெட் எடுத்தார்கள். இந்தப் போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப், லக்னோ, டெல்லி ஆகிய 3 அணிகளுக்காக கே.எல். ராகுல் தலா 1 சதம் அடித்துள்ளார்.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதத்தை அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை ராகுல் படைத்துள்ளார். இது போக அந்த 3 சதங்களையும் அவர் விக்கெட் கீப்பராக அடித்துள்ளார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ராகுல் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாத்தையும் சிஎஸ்கே மேல காட்டுவோம்.. பஞ்சாப்பிடம் வெற்றியை கோட்டை விட இதான் காரணம்.. சாம்சன் பேட்டி
இதற்கு முன் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட், குவிண்டன் டீ காக் தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் டி20 கிரிக்கெட்டில் ராகுல் 224 இன்னிங்ஸில் 8000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் வேகமாக 8000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ராகுல் படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 243 இன்னிங்ஸில் 8000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சூரியகுமார் (2013இல் 103*) சாதனையையும் ராகுல் (2025இல் 112*) உடைத்துள்ளார்.