தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை என்ற 1 – 1 கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி சமன் செய்தது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது.
2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் நடைபெறும் இத்தொடரில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்று கொடுத்து இந்தியாவுக்காக அறிமுகமான ரிங்கு சிங் டி20 கிரிக்கெட்டில் இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
ராகுல் பதில்:
அதன் காரணமாக முதல் முறையாக ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு இத்தொடரில் விளையாடு 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிங்கு சிங்கிற்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று கேப்டன் கேஎல் ராகுல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தாம் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளதால் சஞ்சு சாம்சனுக்கு 5, 6 ஆகிய இடங்களில் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “ஆம். ரிங்கு 6வது இடத்தில் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் தன்னை நல்ல வீரராக காண்பித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவருடைய திறமைகளை நாம் பார்த்தோம்”
“அதை விட சமீபத்திய டி20 தொடர்களில் அவர் வெளிப்படுத்திய சுபாவம், விளையாட்டு விழிப்புணர்வு மற்றும் நிதானம் ஆகியவை மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் உள்ளூர் அளவில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும். இதே தொடரில் நான் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் மகிழ்ச்சியுடன் களமிறங்க உள்ளேன்”
இதையும் படிங்க: இதுக்கே சோகமானா எப்படி? அதையும் பாப்பீங்க.. வாசிம் ஜாஃபர் கணிப்பால் ரோஹித் ரசிகர்கள் கவலை
“அடுத்ததாக நடைபெறும் டெஸ்ட் தொடரிலும் கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் விரும்பும் எந்த வேலையையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். அதே போல டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும் என்னுடைய நாட்டுக்காக கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் விளையாட தயாராக உள்ளேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



