வீடியோ : மாப்ள்ளைக்கு அவ்ளோ வெறி! பயிற்சியின் போது நாற்காலியை உடைத்த கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்

Russell Breaks Chair
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பல எதிர்பாராத திருப்பங்களை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்து வெற்றிகரமான 4-வது வாரத்தைக் கடந்து மும்பை நகரில் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் வாரத்திற்கும் 4-வது வாரத்திற்கும் இடையே நிறைய எதிர்பாராத திருப்பங்கள் நடந்தேறியதால் புள்ளி பட்டியலில் ஒருசில எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக முதல்வாரத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன்பின் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் நேரடியாக 2-வது இடத்தில் ஜொலிக்கிறது.

ஆனால் முதல் வாரத்தில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும் முதல் 4 இடங்களில் மின்னிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன்பின் தொடர் தோல்விகளால் தற்போது புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் தத்தளிக்கிறது. இத்தனைக்கும் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட நட்சத்திர இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் முதல் வாரத்தில் அசத்திய அந்த அணி அதன்பின் வரிசையாக பெற்ற 4 தொடர் தோல்விகளுக்கான காரணத்தை கண்டறிய முடியாமல் தவித்து வருகிறது.

- Advertisement -

என்னாச்சு கொல்கத்தா:
சமீபத்திய போட்டிகளில் அந்த அணியின் பந்துவீச்சில் சுனில் நரேன் தவிர ஏனைய அனைத்து வீரர்களும் சிறப்பாக பந்துவீசி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது தோல்விக்கான ஒரு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. குறிப்பாக அந்த அணி தக்க வைத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் மாயாஜாலம் நிகழ்த்துவார் என்று பார்த்தால் ரன்களை வாரி வழங்கிக் கொண்டு வருகிறார்.

அதேபோல் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒவ்வொரு போட்டியிலும் முடிந்தவரை போராடுகையில் நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்காததும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. மேலும் இதுவரை ஒரு நிலையான ஓபனிங் ஜோடியை கண்டறிய முடியாமல் அந்த அணி தவித்து வருகிறது. அதற்காக வெவ்வேறு வீரர்களை களமிறக்கி சோதித்து வரும் அந்த அணி நிர்வாகம் குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியில் சாம் பில்லிங்ஸ் – சுனில் நரேன் ஆகியோரை சோதித்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை.

- Advertisement -

தனிஒருவன் ரசல்:
தற்போதைய நிலைமையில் அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திர அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டும்தான் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தாங்கிப் பிடிப்பவராக உள்ளார். அதிலும் குஜராத்துக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 19 ஓவரில் 151/6 என்ற நிலைமையில் இருந்தது. அப்போது முதல் முறையாக பந்துவீச வந்த ரசல் கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து 3, 4 ஆகிய பந்துகளில் சிங்கிள், பவுண்டரியை கொடுத்து மீண்டும் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார்.

மொத்தத்தில் அந்த ஒரே ஓவரில் 5 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளிய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சரித்திர சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து 157 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் உட்பட அனைவரும் பேட்டிங்கில் சொதப்பியதால் 98/6 என்ற நிலையில் தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது களமிறங்கிய ரசல் அதிரடி சரவெடியாக 1 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட 48 (25) ரன்களை விளாசி கொல்கத்தாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த நிலையில் கடைசி ஓவரில் அவுட்டானதால் அந்த அணி வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

மாப்ள்ளைக்கு வெறி:
பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே முழு மூச்சை கொடுத்து போராடிய போதிலும் தனது அணி தோற்றுப் போனதால் அன்றைய நாளில் ஆண்ட்ரே ரசல் விரக்தியுடன் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் வரும் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் டெல்லியை கொல்கத்தா எதிர்கொள்கிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பயிற்சியின் போது பொதுவாகவே முரட்டுத்தன மனிதராக காட்சியளிக்கும் ஆண்ட்ரே ரசல் அடித்த ஒரு சிக்ஸர் பந்து மைதானத்தின் ஓரத்தில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை பதம் பார்த்து உடைத்தது. அதை கொல்கத்தா அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அதை பார்க்கும் ரசிகர்கள் மிரண்டுபோய் மாப்பிள்ளைக்கு அவ்ளோ வெறி என்ற வகையில் அவரின் அதிரடியான பலத்தை கண்டு வியக்கிறார்கள்.

Advertisement