இப்படி ஒரு சாதனையை யாரால் செய்ய முடியும்? – ஐபிஎல் வரலாற்றில் ஆரோன் பின்ச் நிகழ்த்திய விசித்திர சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் வரும் மார்ச் 29 முதல் மே 22 வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 70 போட்டிகள் லீக் சுற்றுக்கான முழு அட்டவணை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது.

விலகிய அலெஸ் ஹேல்ஸ்:
கொல்கத்தா அணிக்காக விளையாட இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி வீரர் அலெஸ் ஹேல்ஸ் 1.5 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருக்க விரும்பாத காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அலெஸ் ஹேல்ஸ் நேற்று திடீரென அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து வீட்டை விட்டு வெளியில் இருந்து கட்டுப்பாட்டு வளையத்துக்குள் இருந்து வருகிறேன். எனவே மீண்டும் அதற்குள் இருந்தால் அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியுமா என தெரியவில்லை. இன்னும் ஒரு சில மாதங்களில் இங்கிலாந்துக்காக விளையாடுவதற்கு தேவையான ஓய்வு எடுக்க விரும்புகிறேன். ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை தவற விடுவதற்காக வருந்துகிறேன்” என கூறினார்.

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் அதன்பின் ஐபிஎல் உள்ளிட்ட பல முக்கிய தொடர்களில் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட வேளையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிடுவது வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.

- Advertisement -

கொல்கத்தாவில் ஆரோன் பின்ச்:
அவரின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச்சை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பல வருடங்களாக ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக இருந்து வரும் இவர் கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று அந்நாட்டுக்கு முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வாங்கிக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர்.

ஏற்கனவே நடந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்காத நிலையில் தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் வாங்கியுள்ளது பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இதுபற்றி கொல்கத்தாவின் தலைமை இயக்குனர் வெங்கி மைசர் பேசுகையில். “ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை விட தனது உடல் நலத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் முன்னிரிமை காட்டும் அலெஸ் ஹேல்ஸ் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு பதிலாக டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ஆரோன் பின்ச் எங்கள் அணியில் விளையாடுவதை வரவேற்கிறோம். அவர் விரைவில் எங்கள் அணியுடன் இணைய உள்ளார்” என கூறினார்.

இப்படியும் சாதனையா:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆரோன் பின்ச் ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். ஆம் இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், புனே வாரியர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 8 அணிகளுக்காக ஏற்கனவே விளையாடியிருந்த அவர் தற்போது 9-வது அணியாக கொல்கத்தா அணியில் விளையாட உள்ளார்.

இதை பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் இப்படியும் கூட சாதனை செய்ய முடியுமா என்று கலகலப்புடன் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். கடந்த பல வருடங்களாக இத்தனை அணிகளுக்காக விளையாடி வரும் அவர் இதுநாள் வரை சிறப்பாக செயல்பட்டு ஒரு அணியில் கூட ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவே இந்த கொல்கத்தா அணியிலாவது சிறப்பாக செயல்பட்டு ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 87 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2005 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement