இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டும் ஐபிஎல் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ள கொல்கத்தா அணி தங்களது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து கழட்டி விட்டது. அதனால் கொல்கத்தா அணியின் கேப்டனாக எந்த வீரரை வாங்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்து இருந்தது.
கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் :
ஏற்கனவே அந்த அணிக்காக ரிங்கு சிங் முதன்மை வீரராக தக்க வைக்கப்பட்டதால் அவர் கேப்டனாக இருப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித கேப்டன்சி அனுபவம் இல்லாத அவரை கேப்டனாக்க முடியாது என்பதனால் புதிய கேப்டனை நியமித்தாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் 23 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற அதிக விலைக்கு அந்த அணி வெங்கடேஷ் ஐயரை தக்க வைத்திருந்தாலும் அவரும் இதுவரை கேப்டன்சி செய்த அனுபவம் இல்லாதவர். அதனால் நிச்சயம் ஒரு புதிய கேப்டன் அவசியம் தேவை.
அந்த வகையில் அனுபவ வீரர்களான ரசல் அல்லது சுனில் நரேன் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனாலும் அவர்களையும் கேப்டனாக நியமிக்க அந்த அணியின் நிர்வாகத்திற்கு விருப்பமில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் இறுதியாக மெகா ஏலத்தின் போது அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடி பின்னர் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணிக்காக விளையாடிய ரகானே தற்போது மீண்டும் கொல்கத்தா அணியால் அடிப்படை விலையான ஒன்றரை கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : மீண்டும் வீட்டுக்கு வர்ற மாதிரி இருக்கு.. 2025இல் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளது பற்றி சாம் கரண்
அவர் ஏற்கனவே சர்வதேச அளவிலும், ஐபிஎல் அளவிலும், மாநில அளவிலும் கேப்டன்சி செய்துள்ளதால் அவரை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் மூன்றாவது வரிசையில் பேட்டிங் இறங்கும் அவர் இன்னிங்சை நிலைப்படுத்துவதோடு அணியின் வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தக் கூடியவர் என்பதனால் அவர் கேப்டனாக மாற அதிகளவு வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



