208 ரன்ஸ் சேசிங்.. 8 சிக்ஸர்களை விளாசி வெறித்தனமாக போராடிய கிளாஸின்.. நூலிழையில் வெற்றி கைமாறியது எப்படி?

Klassen Rana
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் 3வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் 2 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர் 7, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்களில் தமிழக வீரர் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நிதிஷ் ராணாவும் 9 ரன்களில் நடையை கட்டியதால் 51/4 என கொல்கத்தா தடுமாறியது. இருப்பினும் எதிர்ப்புறம் மற்றொரு துவக்க வீரர் பில் சால்ட் நிதானமாக விளையாடினார். அப்போது வந்த இளம் வீரர் ரமந்திப் சிங் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 35 (17) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அசத்திய பில் சால்ட் அரை சதமடித்து 54 (40) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

த்ரில் போட்டி:
ஆனால் அப்போது வந்த நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் தன்னுடைய ஸ்டைலில் முரட்டுத்தனமாக விளையாடி 20 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். நேரம் செல்ல செல்ல பட்டையை கிளப்பிய அவர் 3 பவுண்டரி 7 சிக்ஸருடம் 64* (25) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ரிங்கு சிங் 23 (15) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் கொல்கத்தா 208/7 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 209 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த மயங் அகர்வால் 32 (21) ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே ரசல் வேகத்தில் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மாவும் 32 ரன்களில் அவுட்டாகி சென்றார். அப்போது அடுத்ததாக வந்த ராகுல் திரிபாதி 20, ஐடன் மார்க்ரம் 18 ரன்களில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி சுழலில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அதனால் 111/4 என தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு அடுத்ததாக வந்த ஹென்றிச் கிளாசென் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய அப்துல் சமத் 15 ரன்களில் அவுட்டானதால் ஹைதராபாத் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் எதிர்புறம் மனம் தளராமல் அதிரடி காட்டிய க்ளாஸென் வருண் சக்கரவர்த்தி வீசிய 18 வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தார்.

அத்துடன் 24.75 கோடி பவுலர் மிட்சேல் ஸ்டார்க் வீசிய 19வது ஓவரிலும் 3 சிக்ஸர்களை தெறிக்கவிட்ட அவர் 25 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு வெற்றிக்கு போராடினார். அவருக்கு அடுத்ததாக வந்த சபாஷ் அகமது சில சிக்ஸர்களை கொடுத்ததால் வெற்றியை நெருங்கிய ஹைதராபாத்துக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த கிளாஸின் இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

இதையும் படிங்க: அசத்திய நடராஜன்.. 3 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. ஹைதரபாத்தை காட்டுத்தனமாக அடித்த ரசல்.. மாஸ் சாதனை

ஆனால் 3வது பந்தில் சபாஷ் அகமது 16 (5) ரன்களில் அவுட்டானார். அதை விட வெற்றியை போராடிக் கொண்டு வந்த க்ளாஸெனும் 5வது பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து எட்ஜ் வாங்கி சூயஸ் சர்மாவிடம் 63 (29) ரன்களில் கேட்ச் கொடுத்தது ஹைதராபாத்துக்கு தோல்வியை உறுதி செய்தது. ஏனெனில் அடுத்து வந்த கேப்டன் கமின்ஸ் கடைசி பந்தில் ரன் எடுக்காததால் 20 ஓவரில் ஹைதெராபாத் 204/7 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி நூலிலையில் வெற்றியை நழுவ விட்டது. அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3, ரசல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement