அசத்திய நடராஜன்.. 3 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. ஹைதரபாத்தை காட்டுத்தனமாக அடித்த ரசல்.. மாஸ் சாதனை

KKR vs SRH 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் 2 ரன்னில் ரன் அவுட்டானார். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயரை 7 ரன்களில் காலி செய்த தமிழக வீரர் நடராஜன் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நிதிஷ் ராணாவும் 9 ரன்களில் நடையை கட்டியதால் 51/4 என கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

ரசல் அதிரடி:
இருப்பினும் எதிர்புறம் மற்றொரு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக வந்து ஜோடி சேர்ந்த இளம் வீரர் ரமந்தீப் சிங் சரவெடியாக 1 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 35 (17) ரன்களை விளாசி சரிவை சரி செய்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய பில் சால்ட் 3 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 54 (40) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோர் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

அதில் ரிங்கு சிங் சற்று நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தம்முடைய ஸ்டைலில் முரட்டுத்தனமாக அடித்த ரசல் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்து வெறும் 20 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். ஆனால் அவருடன் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் கடைசி ஓவரில் 3 பவுண்டரியுடன் 23 (15) ரன்களில் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த ரசல் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 64* (25) ரன்களை 256.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் ஒரு கட்டத்தில் 32/3 என தடுமாறிய கொல்கத்தா 20 ஓவர்களில் 208/7 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த 7 சிக்சர்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 200 சிக்சர்கள் (1322 பந்துகள்) அடித்த வீரர் என்ற சாதனையையும் ரசல் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 1811 பந்துகளில் 200 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: தோனிக்காக சமளிக்காதீங்க ரெய்னா ஜீ.. அவரையும் கொஞ்சம் காட்ட சொல்லுங்க.. நேரலையில் கலாய்த்த சேவாக்

மறுபுறம் கடைசியில் சற்று தடுமாற்றமாக பந்து வீசிய ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 4 ஓவரில் 32 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து நன்றாகவே பந்து வீசினார். இதைத்தொடர்ந்து 209 ரன்களை ஹைதராபாத் அணி வெற்றிக்காக சேசிங் செய்து வருகிறது.

Advertisement