106 ரன்ஸ்.. போராடிய ரிஷப் பண்ட்.. டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா.. 16 வருடங்களில் செய்யாத ஹாட்ரிக் சாதனை

DC vs KKR 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் 18 (12) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரேன் பவர்பிளே ஓவர்களில் டெல்லி பவுலர்களைப் பந்தாடி வேகமாக ரன்கள் சேர்த்தார். அதே வேகத்தில் தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரேன் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் அரை சதமடித்து 85 (39) ரன்கள் குவித்து தனது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தார்.

- Advertisement -

கொல்கத்தா சாதனை:
அவருடன் எதிர்புறம் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிய இளம் வீரர் அங்க்ரிஸ் ரகுவன்சி தனது அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே 5 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (27) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஆண்ட்ரே ரசல் அடித்து நொறுக்கி 4 பவுண்டரி 3 சிகாருடன் 41 (19) ரன்களும் ரிங்கு சிங் வெறும் 8 பந்துகளில் 26 ரன்களும் விளாசினர்.

அதனால் 20 ஓவரில் 272/7 ரன்கள் குவித்த கொல்கத்தா ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே 3, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 273 ரன்களை துரத்திய டெல்லிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த டேவிட் வார்னர் 18, பிரிதிவி ஷா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷ், அபிஷேக் போரேல் டக் டக் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 33/4 என தடுமாறிய டெல்லிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ட்ரிஷன் ஸ்டப்ஸ் ஆகியோர் வெற்றிக்கு போராடினர். அதில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 12வது ஓவரில் வெங்கடேஷ் ஐயருக்கு எதிராக 4, 6, 6, 4, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்து அரை சதமடித்து அடுத்த ஓவரிலேயே 55 (25) ரன்களில் அவுட்டானார்.

அதே போல எதிர்ப்புறம் போராடிய ட்ரிஷன் ஸ்டப்ஸ் தமது பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 54 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அக்சர் படேல் போன்ற மற்ற வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 17.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரா 3, வருண் சக்கரவர்த்தி 3, ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: 18 சிக்ஸ் 272 ரன்ஸ்.. டெல்லியை பொளந்த கொல்கத்தா.. நூலிலையில் ஆல் டைம் ரெக்கார்ட்டை தவற விட்டாலும் புதிய மாஸ் சாதனை

மேலும் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சீசனின் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று கொல்கத்தா புதிய சாதனை படைத்துள்ளது. 2008 – 2023 வரையிலான 16 வருடங்களில் அந்த அணி ஒருமுறை கூட இப்படி ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்றதில்லை.

Advertisement