
ஐக்கிய அரபு நாடுகளில் 2025/26 சர்வதேச லீக் டி20 பிரீமியர் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் இறுதிப்போட்டியில் டெசர்ட் ஃவைப்பர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. ஜனவரி 4ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெசர்ட் அணி 20 ஓவரில் 182/4 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74* (51) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பகார் ஜமான் 20, மேக்ஸ் ஹோல்டன் 41, டான் லாரன்ஸ் 23 ரன்கள் எடுத்தார்கள். எம்ஐ அணிக்கு அதிகபட்சமாக பரூக்கி 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய எம்ஐ அணிக்கு முகமது வாசிம் 26, ஆன்ட்ரேட் பிளக்சர் 10, டாம் பாண்டன் 7, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 54/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு சாகிப் அல் ஹசன் – கேப்டன் கைரன் பொல்லார்ட் நிதானமாக விளையாடினார்கள். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த நாசிம் ஷா வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தை பொல்லார்ட் தடுத்து நிறுத்தினார். அவரைப் பார்த்து நாசீம் ஷா சிரிக்கும் வகையில் ரியாக்சன் கொடுத்தார்.
அதற்கு “என்ன” என்று கேட்ட பொல்லார்ட் அருகே சென்று பேசினார். அதற்கு நாசீம் ஷா பதிலடி கொடுத்ததால் இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை நடுவர் மற்றும் டெசர்ட் அணி கேப்டன் சாம் கரண் தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 36 (27) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
ஆனால் நாசீம் ஷா வீசிய அடுத்த ஓவரிலேயே பொல்லார்ட் 28 (28) ரன்னில் அவுட்டாகி சொதப்பினார். கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இறுதிப்போட்டிகளில் அடித்து நொறுக்கிய அவர் மும்பையை வெற்றி பெற வைத்துள்ளார். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த பொல்லார்ட் இப்போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்தையே கொடுத்தார்.
இறுதியில் 18.3 ஓவரில் எம்ஐ எமிரேட்ஸ் அணியை வெறும்136 ரன்களுக்கு சுருட்டிய டெசர்ட் வைப்பர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் சர்வதேச லீக் டி20 தொடரில் டெசர்ட் வைப்பர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நாசிம் ஷா, டேவிட் பைன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையும் படிங்க: அபிஷேக், பும்ரா இல்ல.. அவர் தான் இந்தியா 2026 டி20 உ.கோ வெல்ல முக்கிய வீரராக இருப்பாரு.. ஏபிடி பேட்டி
அதன் காரணமாக 2010க்குப்பின் தொடர்ந்து 13 வெற்றிகளுக்குப் பின் முதல் முறையாக பொல்லார்ட் ஒரு டி20 தொடரின் ஃபைனலில் தோல்வியை சந்தித்துள்ளார். கடைசியாக 2010 ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பைக்காக தோற்ற அவர் 16 வருடங்கள் கழித்து இப்போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.