ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 204/6 ரன்கள் எடுத்து தடுமாற்றமாக விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 2, ராகுல் 14, கேப்டன் கில் 21, ஜடேஜா 9, துருவ் ஜுரேல் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதே போல் சுதர்சன் 38 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடும் கருண் நாயர் அரை சதத்தை அடித்து 52* ரன்களுடன் விளையாடி வருகிறார். அவருடன் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 19* ரன்கள் அடித்த கைகொடுத்து வருவதால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 300 ரன்களை தாண்ட முயற்சிக்க உள்ளது.
கடிமான உழைப்பாளி கருண்:
அதற்கு கருண் நாயர் இங்கிருந்து சிறப்பாக விளையாடி சதத்தை அடிப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் அவருடைய கேரியரில் இதுவே இந்தியாவுக்காக விளையாடும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் 2016 இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் சென்னையில் சேவாக்கிற்கு பின் முச்சதமடித்து சாதனை படைத்தார்.
ஆனால் அதன் பின் அரை சதம் கூட அடிக்காததால் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது உள்ளூரில் போராடி 8 வருடம் கழித்து கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் முதல் 3 போட்டிகளில் பெரிய ரன்கள் எடுக்காததால் 4வது போட்டியில் கழற்றி விடப்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது. இருப்பினும் போராடி கம்பேக் கொடுத்த அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை உறுதியாக்க வேண்டுமெனில் சதமடிப்பது அவசியமாகிறது.
கெவின் பீட்டர்சன் பாராட்டு:
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தாம் செயல்பட்ட போது இங்கிலாந்தில் அசத்துவதற்காக கருண் நாயர் மிகவும் கடினமாக உழைத்ததாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். எனவே இந்தப் போட்டியில் அவர் சதத்தை அடிப்பதைப் பார்க்க விரும்புவதாகவும் பீட்டர்சன் கூறியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: விராட் கோலியுடன் இணைந்து 2 ஆவது கேப்டனாக சுப்மன் கில் நிகழ்த்திய மோசமான சாதனை – விவரம் இதோ
“நேற்று கருண் நாயர் இந்தியாவின் பேட்டிங்கை எப்படி உறுதிப்படுத்தினார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் தனது ஆட்டத்தில் மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர். ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது குறித்து நாங்கள் பல மணி நேரம் பேசினோம். இன்று அவர் ஒரு அற்புதமான சதத்தை அடிப்பார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.



