இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அந்தத் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்குகிறது.
முன்னதாக மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய துவக்க வீரர் அபிஷேக் சர்மா 135 ரன்கள் குவித்தார். குறிப்பாக 13 சிக்சர்கள் பறக்க விட்ட அவர் ஒரு டி20 போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.
யுவ்ராஜ் சிங் போல:
மேலும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் ஆல் ரவுண்டராக வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் அபிஷேக் ஷர்மாவிடம் இந்திய ஜாம்பவான் யுவ்ராஜ் சிங்கின் சாயல் இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும் ரிவர்ஸ் ஸ்வீப், குருட்டுத்தனமான ஷாட்டுகள் போன்றவற்றை அடிக்காத அபிஷேக் அடிப்படையான தரமான கிரிக்கெட்டை விளையாடி 135 ரன்கள் குவித்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
எனவே அபிஷேக் அடித்தது தாம் பார்த்த சிறந்த சர்வதேச டி20 சதங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பீட்டர்சன் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் அற்புதமாக விளையாடினார். அவரிடம் யுவ்ராஜ் சிங் இருக்கிறது. அபிஷேக்கை தற்போது யுவ்ராஜ் சிங் தேய்த்து இழைத்து வருகிறார்”
பீட்டர்சன் பாராட்டு:
“அவருடைய பேட்டிங் நன்றாக இருந்தது. அது நான் பார்த்த ஒரு சர்வதேச டி20 இன்னிங்ஸ். இதைப் போட்டி முடிந்ததும் அவரிடமே நான் நேரடியாக சொன்னேன். ஏனெனில் அது சிரமம் இன்றி வந்தது. அந்த ஆட்டத்தில் எந்த குருட்டுத்தனமான ஷாட்டுகள், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ரேம்ப் ஷாட்டுகள் இல்லை. அது மிகவும் கச்சிதமான இன்னிங்ஸ்” என்று பாராட்டினார்.
இதையும் படிங்க: மாயங்க் யாதவ் கண்டிப்பா இதை செய்வார்.. ஐ.பி.எல் தொடரிலும் அசத்துவார் – ஜாஹீர் கான் நம்பிக்கை
இது போக 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய தங்களுடைய பவுலர்களுக்கு எதிராக அபிஷேக் சர்மா அடித்தது மிகவும் சிறந்த சதம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லமும் பாராட்டினார். அந்தளவுக்கு அபிஷேக் எதிரணி பாராட்டும் அளவுக்கு அசத்தினார். அதனால் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் அவர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.